கிளிநொச்சி குளத்தின் நீரேந்து பகுதி பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குவதற்காக நீரை பெற்றுக்கொள்ளும் குளமான கிளிநொச்சி குளத்தின் நீரேந்து பகுதிகளை பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக கிளிநொச்சி குளத்திலிருந்து நீர் பெற்றுக்கொள்ளப்படுகிறது.
வைத்தியசாலை கழிவகற்றல் நடவடிக்கை
கிளிநொச்சி குளத்திற்கு இரணைமடு இடது கரை வாய்க்கால் மூலமும், கனக்காம்பிகைகுளம் வான் பாய்கின்ற ஆறு ஊடாக வருகின்ற நீரும் வந்து சேர்கிறது.
ஆனால் இந்த நீரேந்து பிரதேசங்கள் தொடர்ச்சியாக மாசடைந்து பாதுகாப்பற்ற பிரதேசங்களாக மாறி வருகிறது. குறித்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் பெறப்பட்ட அறிக்கைகளின் ஊடாக இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக மாவட்ட வைத்தியசாலையின் கழிவகற்றல் நடவடிக்கையில் ஏற்படுகின்ற குறைபாடுகள் காரணமாக ஆபத்தான கழிவுகள் ரை ஆறு ஊடாக கிளிநொச்சி குளத்தை அடைகிறது.
அத்தோடு தற்போது அமைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண விசேட மகப்பேற்று மருத்துவமனையிலும் முறையான கழிவகற்றல் பொறிமுறை ஸ்தாபிக்கப்படாத நிலையில் அதனால் எதிர்காலத்தில் வெளியாகும் ஆபத்தான மருத்துவக் கழிவுகளும் கிளிநொச்சி குளத்தை அடையும்.
குளம் மாசடைவு
மேலும் ஆறு பகுதிகளில் குப்பைகள் (பம்பஸ்) உட்பட பல கழிவுகள் கொட்டப்படுகின்றமை, கிளிநொச்சி குளத்திற்கும் அதன் நீரேந்து பகுதிகளுக்கும் என ஒதுக்கப்பட்ட நிலங்ள் ஆக்கிரமிக்கப்படுவதும் அதனால் ஏற்படும் கழிவுகளும் மற்றும் கிளிநொச்சி நகர், சேவை சந்தைகளின் கழிவுகள் இரத்தினபுரம் பாலத்திற்கு ஊடாக கிளிநொச்சி குளத்திற்கு செல்வது, அறிவியல் நகர் தொழில் பேட்டை பிரதேசமாக காணப்படுவதனால் அங்கிருந்து வெளியேறும் கழிவுகள் கனகாம்பிகைகுளத்தின் ஊடாக ரை வழியாக கிளிநொச்சி குளத்தை அடைதல், நகரத்தில் உரிய முறையில் மலசல கூடங்கள் அமைக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் கிளிநொச்சி குளம் மாசடைந்து வருகிறது.
இதன் காரணமாக மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குவதற்காக நீரை குறித்த குளத்திலிருந்து பெறுகின்ற போது அதனை சுத்திகரிக்க அதிகரித்த செலவுகள் ஏற்படுகிறது.
இதன் காரணமாக பொது மக்களுக்கு சீராக நீர் வழங்க முடியாத நிலையும் அவ்வவ்போது ஏற்படுகிறது. இதன் காரணமாக கிளிநொச்சி குளத்தின் நீரோந்து பகுதிகளை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர் எஸ்.சாரங்கன் 2024 ஜனவரி மாதம் நவீன தொழிநுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் போது எவ்வாறான மாசடைந்த நீரையும் சுத்திகரித்து வழங்க முடியும் ஆனாலும் நீரின் மாசு அதிகரிக்க அதிகரிக்க சுத்திகரிக்குமும் செலவுகளும் அதிகரித்துச் செல்லும் எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து கிளிநொச்சி குளத்தின் நீரோந்து பகுதிகளை எல்லைக் கல் இட்டு அடையாளப்படுத்துவது எனவும் இதனை நீர்ப்பாசனத் திணைக்களம், பிரதேச செயலகம் என்பன மேற்கொள்ளவும், குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு தடவை நீர் பாதுகாப்பு தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொள்வதற்கும் இதற்கமைவாக தொடர்பாடல்களை இலகுவாக மேற்கொள்ளும் பொருட்டு வட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கவும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இக் கலந்துரையாடலில் திட்டமிடல் பணிப்பாளர், நீர் வழங்கல் மற்றும்
வடிகாலமைப்பு சபை அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர்,
பிரதேச செயலாளர்கள், பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர், மாவட்ட
ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர்,
பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின்
உதவிப் பணிப்பாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், பொலிஸ்,இராணுவ
அதிகாரிகள், துறைசார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள், மாவட்டச்செயலக
உத்தியோகத்தர்கள்,விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து
கொண்டனர்.