பலஸ்தீன போர்க்குற்றங்களுக்காக இஸ்ரேல் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும்: ஐ.நாவுக்கு மகஜர்
பலஸ்தீன மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்ளையும், மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களையும் புரிந்த இஸ்ரேலியக் குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்வதுடன் நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் அலுவலகத்திடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பலஸ்தீன விடுதலை அமைப்பின் பிரதிநிதிகள் இணைந்து நேற்று(21.10.2025) கொழும்பில் உள்ள பலஸ்தீனத்தூதரகத்தில் இருந்து ஐக்கிய நாடுகள் அலுவலகம் வரை கவனயீர்ப்புப்பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
அத்துடன், அவர்களால் ஐக்கிய நாடுகள் அலுவலகத்திடம் இது தொடர்பான மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
நீதி நிலைநாட்டப்பட வேண்டும்: கையளிக்கப்பட்ட மகஜர்
நீண்டகாலமாக காஸா மீது இஸ்ரேல் நடத்திவந்த தாக்குதல்கள் அண்மையில் அமெரிக்காவின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து இடைநிறுத்தப்பட்டன.
இந்நிலையில் இதுவரை காலமும் பலஸ்தீனத்தில் பாரிய மனிதப்பேரழிவு நிகழ்வதற்குக் காரணமாக இருந்த போர்க்குற்றங்களையும், மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களையும் நிகழ்த்திய இஸ்ரேலிய போர்க்குற்றவாளிகள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த கவனயீர்ப்புப்பேரணி முன்னெடுக்கப்பட்டதுடன், ஐக்கிய நாடுகள் அலுவலகத்திடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
பலஸ்தீன விடுதலையை வலியுறுத்தும் கோஷங்கள்
அதன்படி நேற்றைய தினம் பி.ப 3.45 மணியளவில் பலஸ்தீனத்தூதுரகத்தில் இருந்து ஆரம்பமான இப்பேரணியில் பங்கேற்றிருந்த பெண் செயற்பாட்டாளர்கள் 'பலஸ்தீனத்துக்கு விடுதலை', 'போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுங்கள்', 'போலியான தற்காலிகப் போர்நிறுத்தம்', 'செம்மணி முதல் காஸா வரை - நிலம் மறக்காது' எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்துடன் பலஸ்தீன விடுதலையை வலியுறுத்தும் கோஷங்களையும் எழுப்பினர்.
மேற்படி பேரணி ஐக்கிய நாடுகள் அலுவலகத்தை நோக்கி நகரத்தொடங்கிய வேளையில், அங்கு குவிக்கப்பட்டிருந்த பொலிஸாரும் அவர்களுக்குச் சமாந்தரமாக ஐ.நா அலுவலகம் நோக்கி நகர்ந்தனர்.
இவ்வாறு பேரணி ஐ.நா அலுவலகத்தைச் சென்றடைந்ததன் பின்னர், அங்கு சிறிது நேரம் கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்ட செயற்பாட்டாளர்கள், பின்னர் ஐ.நா அலுவலக அதிகாரியிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரைக் கையளித்தனர்.
பெண்கள் உரிமை செயற்பாட்டாளரின் கண்டனம்
அங்கு கருத்து வெளியிட்ட சிவில் சமூக மற்றும் பெண்கள் உரிமை செயற்பாட்டாளர் ஷ்ரீன் ஸரூர், தற்போது நடைமுறைப்படுத்தப்படுவதாகக் கூறப்படும் தற்காலிகப் போர்நிறுத்தம் முற்றிலும் பொய்யானது.
மேலும், அதனையும் மீறி கடந்த சில தினங்களில் சுமார் 200 பேர் வரை இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியதுடன் இவ்வாறு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் இஸ்ரேலையும், அதனை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவையும் தான் வன்மையாகக் கண்டித்தாகத் தெரிவித்தார்.
You May Like This Video...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |