ஜனாதிபதி மாளிகை, செயலகம் உட்பட முக்கிய சில கட்டடங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

Colombo Ranil Wickremesinghe Sri Lanka Politician Prime minister Temple Trees
By Sivaa Mayuri Jun 11, 2023 12:01 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

இலங்கையின் ஜனாதிபதி மாளிகை, செயலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகை என்பவற்றை கொழும்பின் புறநகரான ஸ்ரீ ஜயவர்த்தனபுரவுக்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தற்போதைய ஜனாதிபதி மாளிகை, செயலகம், பிரதமரின் அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் என்பன சுற்றுலா தளங்களாக பராமரிக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஸ்ரீ ஜயவர்தனபுர - கோட்டே பிரதேசத்தில் ஒரே இடத்தில் நிர்வாக வளாகத்தை அமைப்பதற்கு மாற்று காணியை தேடி வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் பிரசாத் ரணவீரவை கோடிட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகை, செயலகம் உட்பட முக்கிய சில கட்டடங்களில் ஏற்படவுள்ள மாற்றம் | Prime Minister Residence Sri Jayawardenepura Kotte

புதிய கொழும்பு பாரம்பரிய நகரத் திட்டம்

குறித்த இடம் அடையாளம் காணப்பட்டதன் பின்னர், கட்டிடங்களை கட்டம் கட்டமாக மாற்றுவதற்கான திட்டங்கள் வரையப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உத்தேச 'புதிய கொழும்பு பாரம்பரிய நகரத் திட்டத்தின்' கீழ் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ், கொழும்பு நகரில் உள்ள ஏனைய கட்டிடங்கள் முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு மீண்டும் வழங்கப்பட உள்ளன.

ஜனாதிபதி மாளிகை, செயலகம் உட்பட முக்கிய சில கட்டடங்களில் ஏற்படவுள்ள மாற்றம் | Prime Minister Residence Sri Jayawardenepura Kotte

அதன்படி, பொது அஞ்சல் நிலையம், வெளிவிவகார அமைச்சு கட்டிடம், காவல்துறை தலைமையகம், விமானப்படை தலைமையகம், கடற்படை தலைமையகம், விசும்பய, ஷ்ரவஸ்தி (நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்னாள் விடுதி)

மற்றும் கஃபூர் கட்டிடம், ஜாவத்தை வீதியிலுள்ள நீர்ப்பாசன திணைக்கள கட்டிடம், வெலிக்கடை சிறைச்சாலைகள் மற்றும் பழைய பாதுகாப்பு காலி முகத்திடலில் உள்ள அமைச்சு கட்டிடம் குத்தகைக்கு வழங்கப்படுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அசல் கட்டிட அமைப்பு

எனினும் இந்த குத்தகையின் போது முதலீட்டாளர்கள் அசல் கட்டிட அமைப்பை தொடர்ந்தும் பேண வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகை, செயலகம் உட்பட முக்கிய சில கட்டடங்களில் ஏற்படவுள்ள மாற்றம் | Prime Minister Residence Sri Jayawardenepura Kotte

வரிச் சலுகை விதிமுறைகளுடன் குறித்த கட்டிடங்களை 30 ஆண்டுகளுக்கும் மேலாக குத்தகைக்கு விடுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹெரிடேஜ் சிட்டி திட்டத்தின் கீழ், கஃபூர் கட்டிடத்திற்கும் போர்ட் சிட்டிக்கும் இடையில் ஒரு பாதுகாப்பான நடைபாதை ஒன்று அமைக்கப்படவுள்ளது.