பிரதமர் ஹரிணி அமரசூரியவின் புதுவருட வாழ்த்துச் செய்தி!

Ethiopian New Year Sri Lanka Politician Harini Amarasuriya
By Fathima Jan 01, 2026 08:22 AM GMT
Fathima

Fathima

கடந்த ஆண்டில் நாம் எதிர்கொண்ட சகலவிதமான சவால்களையும் சக்தியாக மாற்றிக்கொண்டு, புதிய உத்வேகத்துடனும், எதிர்பார்ப்புகளுடனும் 2026ஆம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்குமாறு அனைவரையும் அழைக்கின்றேன் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2026 ஆம் ஆண்டின் விடியலில் நாம் நின்றுகொண்டிருக்கும் இந்த வேளையில், கடந்து வந்த 2025ஆம் ஆண்டை மீளாய்வு செய்வது காலத்தின் தேவையென நான் கருதுகின்றேன்.

புதிய உத்வேகம்

ஒரு மக்கள் நல அரசாக, பல தீர்க்கமான மற்றும் முன்னோடியான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிந்த ஓர் ஆண்டாக 2025ஆம் ஆண்டை எண்ணி ஒருபுறம் நாம் மகிழ்ச்சியடைய முடியும். புதிய அரசியல் கலாசாரமொன்றின் அடிப்படையில், அரச நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், ஊழலற்ற வினைத்திறன் மிக்க அரச சேவைக்கான அடித்தளத்தை அமைக்கவும் எம்மால் முடிந்துள்ளதென நான் நம்புகின்றேன்.

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் புதுவருட வாழ்த்துச் செய்தி! | Prime Minister Harini New Year S Greetings

பொருளாதார ஸ்திரத்தன்மை, சர்வதேச ரீதியாக எமது நாட்டின் மீது கட்டியெழுப்பப்பட்டு வரும் நேர்மறையான கண்ணோட்டம், வெளிப்படைத்தன்மை மிக்க ஆட்சி முறைமை மற்றும் சட்டத்தின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தியமை போன்ற பல பிரதான துறைகளின் ஊடாக 2025ஆம் ஆண்டைப் பற்றி நாம் திருப்தியடையலாம்.

எவ்வாறாயினும், 2025ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் எதிர்கொள்ள நேர்ந்த துரதிர்ஷ்டவசமான இயற்கை அனர்த்தம், எமது நாட்டுக்குச் சவாலானதொரு காலப்பகுதியாக அமைந்தது. அது நம் அனைவரது மனங்களையும் கவலையில் ஆழ்த்திய போதிலும், அத்தகைய இக்கட்டான தருணத்திலும் இலங்கையர்களாக நாட்டு மக்கள் வெளிப்படுத்திய சகோதரத்துவம், மனிதாபிமானம் மற்றும் ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிய விதம் குறித்து இன்று உலகளவில் பேசப்பட்டு வருகின்றது.

அந்தச் சவால்களை வெற்றிகொண்டு, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை ஆற்றி, சீர்குலைந்த அவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் உறுதியான அர்ப்பணிப்புடனேயே 2026ஆம் ஆண்டுக்குள் நாம் கால்பதிக்கின்றோம்.

கடந்த ஆண்டில் நாம் எதிர்கொண்ட சகலவிதமான சவால்களையும் சக்தியாக மாற்றிக்கொண்டு, புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026ஆம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்குமாறு உங்களை அழைக்கின்றேன். உங்கள் அனைவருக்கும் அமைதியும், மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்த வெற்றிகரமான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! என குறிப்பிட்டுள்ளார்.