இன்று நள்ளிரவுடன் குறைகிறது லிட்ரோ எரிவாயுவின் விலை: லிட்ரோ நிறுவனம்
லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை குறைக்கப்படவுள்ளதாக, லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார்.
அதன்படி இன்றைய தினம் (04.06.2023) நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு கொள்கலனின் விலை, 300 ரூபாவிற்கும் அதிக தொகையில், குறைக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் விலை குறைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் இன்றைய தினம் (04.06.2023 விடுக்கப்படவுள்ளது.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, உலக சந்தையில், எரிவாயு விலை குறைவடைந்துள்ளமை மற்றும் ரூபாவின் பெறுமதி மீளவும் வலுப்பெற்றுள்ளமை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டு, பொதுமக்களுக்குச் சலுகையை வழங்க எதிர்பார்த்துள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயு
இறுதியாக, கடந்த மாதம் 3ஆம் திகதி லிட்ரோ எரிவாயு கொள்கலன் விலை குறைக்கப்பட்டது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை, 100 ரூபாவால் குறைக்கப்பட்டு, 3 ஆயிரத்து 638 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டு, ஆயிரத்து 462 ரூபாவுக்கு விற்பனையாகிறது.
2.3 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை, 19 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 681 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைத்திருத்தம் தொடர்பில், லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாவது, நிறுவனத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர்களிடம் கலந்துரையாடி நாளைய தினம், விலைத்திருத்தம் தொடர்பில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.