வாகனங்களை உட்கொண்டு விட்டீர்களா..! முன்னாள் ஜனாதிபதிகளிடம் கேள்வி
ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்
புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட பல வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு அருகிலும் கொழும்பில் வேறு சில பகுதிகளிலும் தொடர்ந்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு மன்றக் கல்லூரிக்கு அருகிலும், காலிமுகத்திடலுக்கு அருகில் உள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு அருகிலும், பாலதக்ஷ மாவத்தையில் உள்ள வாகன தரிப்பிடத்திலும் இவ்வாறு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, வி8 ரக சொகுசு வாகனங்கள், ஜீப் ரக வாகனங்கள், ரேன்ஜ் ரோவர், மொன்டிரோ உள்ளிட்ட பல வாகனங்கள் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
சட்ட நடவடிக்கை
மேலும் தெரிவிக்கையில், குறித்த வாகனங்களை விட்டுச் சென்ற நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஜனாதிபதி அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்ட 833 வாகனங்களில் 2022ஆம் ஆண்டளவில் 29 வாகனங்கள் காணாமல் போயுள்ளன.
வாகனங்களை உட்கொண்டு விட்டீர்களா என இந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளிடம் கேள்வி எழுப்ப வேண்டும். ஜனாதிபதி செயலகத்தின் கீழ் காணப்பட்ட 259 வாகனங்கள் வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன.
அவ்வாறான வாகனங்களே பல பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் நடத்தப்படும். அத்துடன் அவ்வாறான சகல தரப்பினர் தொடர்பான விபரங்களும் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |