தேசபந்து தென்னகோனுக்கு வழங்கிய பதவியை உடன் ரத்துச் செய்யுங்கள்! ரணிலிடம் வலியுறுத்தல்
அண்மையில் வழங்கப்பட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பை கருத்திற் கொண்டு தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக நியமனம் செய்யப்பட்டதை உடனடியாக ரத்துச்செய்யுமாறு இலங்கையின் முன்னணி சட்டத்தரணிகள் குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளது.
தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட பிரதிவாதிகள், முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரை சித்திரவதை செய்தமை மற்றும் சட்டவிரோத கைது என்ற அடிப்படையில் அவரின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜனாதிபதிக்கு கடிதம்
இந்தநிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் ஏனைய காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தநிலையில்; சட்டத்தரணிகள் கூட்டமைப்பு, இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது.
சித்திரவதை என்ற கடுமையான குற்றத்திற்காக முறைப்படி குற்றம் சாட்டப்பட்டு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் உயர்நீதிமன்றால் குற்றம் சுமத்தப்பட்ட தேசபந்து தென்னகோன் உட்பட்டவர்கள் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று சட்டத்தரணிகள் குழு ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.
டிரன் அலஸ் நிராகரிப்பு
பதில் பொலிஸ் மா அதிபரின் அதிகாரங்கள் தொடர்பில்; ஜனாதிபதியால் மாத்திரமே நேரடியாகப் பொறுப்புக் கூற முடியும்.
தேசபந்து தென்னகோன் சித்திரவதைக்கு பொறுப்பானவர் என்று தீர்ப்பு வழங்கப்பட்ட சில நாட்களுக்குள், பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ், பொலிஸாருக்கு தென்னக்கோனின் தலைமையை பகிரங்கமாக நிராகரித்துள்ளார்.
சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பான இலங்கையின் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸாரின் கொலைகளுக்கு அவர் ஆதரவையும் வெளியிட்டுள்ளதாக சட்டத்தரணிகள் குழு குற்றம் சுமத்தியுள்ளது.