போர்த்துகல் இஸ்மாயிலி முஸ்லிம் மையத்தில் இரண்டு பெண்கள் குத்திக் கொலை

Portugal
By Fathima Mar 28, 2023 08:49 PM GMT

போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் உள்ள முஸ்லிம் மத மையத்தில் இரண்டு பெண்கள் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவெனிடா லூசியாடாவில் உள்ள இஸ்மாயிலி மையத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பெரிய கத்தி ஒன்றை வைத்திருந்த சந்தேகநபர், பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை.

சந்தேகநபர் மையத்திற்குள் நுழைந்த பின்னர் உள்ளூர் நேரப்படி சுமார் 11:00 மணியளவில் தமக்கு அழைப்பு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகாரிகள் சந்தேக நபரிடம் தாக்குதலை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர், ஆனால் அவர் கீழ்ப்படியாத நிலையில் சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர் ஆப்கானிஸ்தான் நாட்டவர் என்றும், பலியான இருவர் போர்த்துகீசிய பெண்கள் என்றும் நம்பப்படுகிறது.

ஒருவர் தாக்குதலாளியின் மையத்தில் ஆங்கில ஆசிரியராகவும் மற்றவர் சக வகுப்புத் தோழராகவும் இருந்ததாக போர்த்துகீசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது "ஒரு தனிமைப்படுத்தப்பட்ட செயல்" என்று போர்த்துகல் பிரதம மந்திரி அன்டோனியோ கோஸ்டா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தாக்குதலின் சூழ்நிலைகள் மற்றும் உந்துதல்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகக் உள்துறை அமைச்சர் ஜோஸ் லூயிஸ் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்தியவர் மூன்று இளம் குழந்தைகளின் தந்தை எனவும், அவரது மனைவி கிரீஸில் உள்ள அகதிகள் முகாமில் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர் போர்ச்சுகலுக்கு ஒரு வருடம் அல்லது அதற்கு முன்பு வந்ததாகவும், அவருக்கு இஸ்மாயிலி மையத்தின் உதவி கிடைத்ததாகவும் ஆப்கானிஸ்தான் சமூக சங்கத்தின் தலைவர் Omed Taeri தெரிவித்துள்ளார்.