கொழும்பில் கார் விபத்தில் சிக்கி இரு பெண்கள் பலி...!
கொழும்பில் காரொன்று விபத்துக்குள்ளாகியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
ஹான்வெல்ல காவல் பிரிவில் உள்ள எம்புல்கம - பனகோடா சாலையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரனாலா மற்றும் கிரந்துருகொட்டே பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 44 வயதுடைய பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், எம்புல்கம நோக்கிச் சென்ற கார் ஒன்று, அதே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது மோதியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குப் பிறகு கார் நிற்காமல் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இதையடுத்து விபத்தில் காயமடைந்த இரண்டு பெண்களும் நவகமுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்குப் பிறகு, சிசிடிவி (CCTV) காட்சிகள் மற்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், சந்தேகத்திற்குரிய சாரதியைக் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட காரையும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
விபத்து நடந்த நேரத்தில் சந்தேக நபர் போதையில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளைக் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.