அரசுக்கு நட்டம் ஏற்படுத்திய ஊழல்: முன்னாள் பிரதியமைச்சருக்கு 16 ஆண்டு சிறை!
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு, ஒவ்வொரு வழக்கிற்கும் நான்கு ஆண்டுகள் வீதம் மொத்தம் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் வழங்கினார். மேலும், குறித்த வழக்குகளுக்காக சரண குணவர்தனவுக்கு 18 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பதவி வகித்த காலத்தில், அந்த நிறுவனத்திற்காக மூன்று வாகனங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டபோது, அவற்றின் உரிமையாளர்களுக்கு சாதகமாகச் செயல்பட்டு அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணை
இதனையடுத்து, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சரண குணவர்தனவுக்கு எதிராக இந்த நான்கு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. தீர்ப்பை வழங்கிய நீதிபதி, பிரதிவாதிக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்திருந்த ஊழல் குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார்.
அரசு நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல் நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதோடு, பொருளாதார வீழ்ச்சிக்கும் காரணமாக அமைகின்றன என்றும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இத்தகைய ஊழல் செயல்கள் அரசு நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கின்றன என்றும் நீதிபதி தெரிவித்தார். தண்டனை வழங்கப்படுவதற்கு முன்னர், குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் 303ஆம் பிரிவின் கீழ் மென்மையான அணுகுமுறையைக் கையாளுமாறு பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும், குற்றத்தின் தீவிர தன்மையைக் கருத்தில் கொண்டு, அரசு நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்களைத் தடுக்கும் வகையில் வலுவான தண்டனையொன்றை வழங்குவது அவசியம் என நீதிபதி வலியுறுத்தினார்.