எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள விசேட திட்டங்கள்: ஜனாதிபதி தலைமையில் ஆலோசனை
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல்-நினோ காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனை எதிர்கொள்ளும் வகையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கைத் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த முறை உருவாகக்கூடிய எல்-நினோ நிலைமை, 2016–2017 காலப்பகுதியில் பதிவான நிலைமைக்கு மிகவும் ஒத்ததாக இருக்கக்கூடும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
அதனை முன்னிட்டு, விசேட நீர் முகாமைத்துவத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அத்துடன், 2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோக விவசாய நடவடிக்கைகளை வழக்கத்தை விட சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்கூட்டியே ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
எதிர்பார்க்கப்படும் காலநிலைச் சூழ்நிலையை முன்னிட்டு, அடுத்த சில மாதங்களில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்தல், விவசாய நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெறுவதை உறுதிப்படுத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பை பேணுதல் ஆகிய விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், மின் உற்பத்தி, எதிர்வரும் சிறுபோகப் பயிர்ச்செய்கைக்குத் தேவையான நீர் வழங்கல் மற்றும் குடிநீர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான திட்டங்களை விரைவாகத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.