ரவூப் ஹக்கீமின் அரசியல் நகர்வும் விமர்சனமும்
எம்.என்.எம்.யஸீர் அறபாத் -ஓட்டமாவடி.
அரசியலில் நிரந்தர நண்பனுமில்லை. நிரந்தர எதிரியுமில்லை என்பது அடிப்படைத் தத்துவமாக பலரும் அடிக்கடி பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.
இலங்கை அரசியலில் பல தடவைகள்,பல சந்தர்ப்பங்களில் இவைகளைக் காண முடிகிறது. குறிப்பாக, சிறுபான்மை அரசியலைப் பொருத்தமட்டில் ஆளும் பெரும்பான்மை அரசில் அதிகாரரங்களோடு ஒத்தியங்கும் ஒரு சாரார் இருந்து கொண்டே இருப்பதைக் காணலாம்.
எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ, அக்கட்சியில் நான் மந்திரி என்ற நிலைப்பாட்டில் பலரும் இருக்கிறார்கள்.
ஆனாலும், ஒரு சிலரே அரசியலில் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப ஆளும் கட்சியாகவும் எதிர்கட்சியாகவும் செயற்படுவதைக் காணலாம். ரவூப் ஹக்கீமைப் பொறுத்தளவில் சில போது ஆளும் கட்சியிலும்,பல தடவை எதிர்க்கட்சியாகவும் அரசியல் செய்த சந்தர்ப்பங்களும் உண்டு. இன்னும் சொல்வதென்றால் ஆளும் கட்சிக்குள் சில சந்தர்ப்பங்களில் அநீதிகள் இடம்பெறும் போது எதிர்கட்சி போன்று செயற்பட்டதையும், ஆளும் கட்சிக்குள்ளே இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் துணிவும் வெளிப்பட்டதைக் கடந்த காலங்களில் காண முடிந்தது.
மேலும், சிறுபான்மைக் கட்சித்தலைவர்கள் தங்களின் சமூகம் சார்ந்த உரிமைகளைப் பெற்றுக் கொள்ளவும், உரிமைகள் பறிக்கப்படும் போது அதனை தடுக்கவும் விரும்பியோ, விரும்பாமலோ அன்றைய ஆளும் கட்சியாகச் செயற்படும் பெரும்பான்மை ஆட்சியாளர்களோடு பேச வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது.
இவ்வாறான சூழ்நிலைகளில் சாதகமாக ஆளும் அரசியல் தலைவர்கள் முடிவெடுப்பதற்கு ஏதுவாக அவர்களோடான உறவைப் பேண வேண்டியது அவசியமாகிறது.
அவர்களுக்கு ஏதாவது முக்கிய சந்தர்ப்பங்களில் நமது உதவி தேவைப்படும் என்ற நிலையிலேயே நமக்கான முக்கியத்துவத்தையும் வழங்குவார்கள். இவ்வாறான அரசியல் சூழ்நிலையில் ரவூப் ஹக்கீம் பெரும்பான்மை அரசியல் தலைவர்களோடும் ஏனைய சிறுபான்மை கட்சித்தலைவர்களோடும் நல்லுறவைப் பேணி வருவதைக் காண முடிகிறது.
மற்றவர்களைப் போன்று யார் ஆட்சிக்கு வந்தாலும், அவ்வாட்சியில் நாட்டு மக்களைப் பாதிக்கும் எந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், தான் சார்ந்த சமூகம் குறித்த ஆட்சியாளர்களால் நசுக்கப்பட்டாலும் மௌனியாக இருந்து அரசாங்கத்துக்கு துதிபாடும் மோசமான அரசியலைச் செய்தது கிடையாது.
அதே போல் அவர்களின் பிழைகளைச் சுட்டிக்காட்டும் அதே நேரம், அவர்களின் நல்ல பணிகளைப் பாராட்டாமலும் இருந்ததில்லை. மேலும், ஆளும் கட்சியின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்தாலும் சமூகம் சார் சில பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற ஆளும் அரசாங்கத்தின் தலைவர்களை அணுகி காரியம் சாதித்த சந்தர்ப்பங்களுமுண்டு.
மேலும், மற்றவர்கள் போன்று எல்லா விடயங்களையும் பொதுவெளியில் பேசி, இனவாதிகளை உசுப்பேற்றி காரியத்தை கெடுத்து விட்டு அரசியல் செய்பவர்களுக்கு மத்தியில் ரவூப் ஹக்கீம் சாமர்த்தியமாக ஆட்சியாளர்களை அணுகி சத்தமில்லாமல் பல விடயங்களை சாதித்து விட்டு, எதனையும் வெளிப்படுத்தி காரியத்தை கெடுத்திடும் எந்த செயல்களையும் அரசில் நோக்கோடு செய்ய விரும்புவதுமில்லை.
சந்திரிக்கா அம்மையார் தொடக்கம், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், கோட்டாபாய அரசாங்கம், தற்போதைய ரணில், ராஜபக்ஷ கூட்டு அரசாங்கம் என எல்லா அரசாங்கங்களோடும் இணைந்தும், எதிர்த்தும் அரசியல் செய்த அனுபவம் ரவூப் ஹக்கீமுக்கு இருக்கிறது.
மேலும், இவ்வரச தலைவர்களுக்கு ரவூப் ஹக்கீமின் ஆளுமையும் அவரின் ஆதரவின் அவசியத்தையும் உணர்ந்ததன் காரணமாக அவருக்கான இடத்தை சில வேலை அரசியலுக்காக ஒரு சிலரைத் திருப்திப்படுத்த மறுத்தாலும் பின்னர் தங்களின் தவறை உணர்ந்து சிநேகிதத்தை வெளிப்படுத்துவதையும் காண முடிகிறது.
அந்த அடிப்படையில் எதிர்க்கட்சி அரசியலில் ரவூப் ஹக்கீம் இருந்தாலும், சிறுபான்மைக் கட்சித்தலைவர் என்ற அடிப்படையில் ஆளும் ஆட்சியார்களிடத்தில் ரவூப் ஹக்கீமுக்கு ஒரு தனி இடமுண்டு. ஆளும் கட்சியின் அழைப்புகளை எல்லா நேரங்களிலும் புறக்கணிக்காது தேவையான நேரங்களில் அவைகளைப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல் சாதுரியம் ரவூப் ஹக்கீமிடம் இருக்கிறது.
அன்று ரவூப் ஹக்கீம் ஆளும் கட்சியாக, அமைச்சராக இருந்தபோது ரவூப் ஹக்கீமின் தாயார் மரணித்த செய்தி கேட்டு ஆறுதல் கூற உடனடியாக ரவூப் ஹக்கீமின் இல்லத்திற்கு அன்றைய எதிர்க்கட்சியிலிருந்த மஹிந்த ராஜபக்ஷ விரைந்தது போன்ற பல விடயங்கள் ஒவ்வொருவரின் முக்கியத்துவத்தையும் அவைகள் வெளிப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களையும் அவதானிக்க முடிகிறது.
இவ்வரிசையில் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன இணைந்து ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டதோடு, மேலும் முன்னாள் பிரதமர் மஹிந்ந ராஜபக்ஷ ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்விலும் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டதை சிலர் விமர்சனம் செய்தாலும் அரசியலில் எதார்த்தங்களைப் புரிந்து கொள்ளாத மூடர்களின் விமர்சனங்களாகவே பார்க்கப்படுகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தை கடுமையாக எதிர்த்தாலும், விமர்சித்தாலும் தங்களின் தேவைகளை, தீர்வுகளைப்பெற தங்களுக்கான வாய்ப்பு அரச தரப்பில் கிடைக்கும் போதெல்லாம் அதனை உதாசீனம் செய்யது கலந்து கொள்வதைக் காண முடிகிறது.
எனவே , மாறி மாறி ஆட்சி செய்யும் பெரும்பான்மை ஆட்சியாளர்களை எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்க்கவும், பேச வேண்டிய நேரத்தில் பேசவும், காரியங்களைச் சாதித்துக் கொள்ளும் திறமையைக் கொண்ட தலைவனாக ரவூப் ஹக்கீம் திகழ்கிறார்.
ஏனைய முஸ்லிம் அரசியல் தலைவர்களோடு ஒப்பிடும் போது சமகாலத்தில் ரவூப் ஹக்கீம் இன்றியமையாத தலைவராக மிளிர்வதைக் காணலாம்.