பிரசன்ன - இஷாராவை கண்டுபிடிக்க மாறுவேடத்தில் பொலிஸ் குழுக்கள்

CID - Sri Lanka Police Sri Lanka Police Sri Lanka
By Dharu May 02, 2025 02:55 PM GMT
Dharu

Dharu

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்வதற்காக நாடு முழுவதும் பத்து சந்தேகத்திற்கிடமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை அவர் குறித்து எந்த தகவலும் இல்லை என்றும் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

மாவர, கிரிபத்கொடை, கிரிலாவல, நீர்கொழும்பு, கம்பஹா, களனி, வத்தளை உள்ளிட்ட பத்து பகுதிகளில் இந்த முறையில் சோதனை நடத்தப்பட்டுவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரசன்ன ரணவீரவைத் தேடுவதற்காக பல்வேறு மாறுவேடங்களில் பல புலனாய்வுக் குழுக்கள் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற வளாகம்

இதற்கிடையில், கொழும்பில் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக தேடப்படும் இஷாரா செவ்வந்தியைக் கண்டுபிடிக்க நாடு முழுவதும் கிட்டத்தட்ட இருநூறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும், ஆனால் அவர் பற்றிய எந்த தடயமும் இல்லை என்றும் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இருவரையும் கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மார்ச் 7 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகவும், இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

பெபப்ரவரி 19 ஆம் திகதி, பாதாள உலகத் தலைவர் சஞ்சீவவை சுட்டுக் கொன்ற நாளிலிருந்து இஷாரா செவ்வந்தி காணாமல் போயுள்ளார்.