வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் தொடர்பில் பொலிஸார் விசேட நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் விசேட நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.
வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள் என 178,613 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களா என்பதை ஆராயும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின்(Deshabandu tennakoon) பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குற்றச் செயல்கள்
நாடளாவிய ரீதியில் பல்வேறு வகையான குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் நபர்கள் நிரந்தர பொலிஸ் பிரிவுகளுக்கு வெளியே வாடகை வீடுகளிலும் வாடகை அறைகளிலும் தங்கி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாடளாவிய ரீதியில் 02 நாட்களில் ஒவ்வொரு கிராம அதிகாரியின் பிரதேசங்களிலும் தற்காலிகமாக வசிப்பவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் சேகரித்துள்ளனர்.
வாடகை மற்றும் குத்தகை அடிப்படையில் பெறப்பட்ட வீடுகளில் 37,183 குடும்பங்களில் 112,963 பேரும், வாடகை மற்றும் குத்தகை அடிப்படையில் பெறப்பட்ட அறைகளில் 10,755 குடும்பங்களில் 34,133 பேரும், வீடுகள் மற்றும் நிறுவனங்களில் காவலாளிகள், வீட்டுப் பணியாளர்கள், தாதியர்களாக 31,517 பேரும் தற்காலிகமாக வசிப்பதாக தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஒழுங்குமுறை தரவு அமைப்பு, தானியங்கி கைரேகை அடையாள அமைப்பு, அறிக்கைகளைப் பெறுவதற்கும், போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் தரவு அமைப்புக்கும் பரிந்துரைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.