இலங்கைக்கு பல கோடி மதிப்பிலான நாய்கள் இறக்குமதி!
பொலிஸ் நாய்கள் பிரிவிற்காக நெதர்லாந்தில் இருந்து 35 நாய்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
5 கோடி 80 இலட்சம் ரூபா பெறுமதியான குறித்த நாய்கள் இன்று (05) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த நாய்கள் நெதர்லாந்தில் இருந்து கட்டாருக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து அதிகாலை 2.05 மணியளவில் கட்டார் ஏர்வேஸ் விமானம் KR-662 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான முனையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
விலங்கு பண்ணை
இந்த நாய்களில் 13 பெல்ஜிய மாலினாய்ஸ் ( Belgium Malinois ) நாய்கள், 12 ஜெர்மன் ஷெப்பர்ட் (German Shepherd ) நாய்கள் மற்றும் 10 ஆங்கில ஸ்பானியல் (English Spaniel ) நாய்கள் என்பன விலங்கு பண்ணையில் இருந்து வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொண்டு வரப்பட்ட நாய்களில் 21 பெண் நாய்களும், 14 ஆண் நாய்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவைகளில், இரண்டு ஆங்கில ஸ்பானியல் பெண் நாய்கள் கர்ப்பமாக உள்ளதுடன் ,மற்றொரு பெண் பெல்ஜிய மாலினாய்ஸ் பண்ணையில் இருந்து ஒரு வலுவான நாயுடன் வளர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2018 ஆம் ஆண்டு பொலிஸ் அதிகாரி நாய் பிரிவுக்காக வெளிநாடுகளில் இருந்து நாய்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இந்த நாய்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலைய விலங்குகள் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள கால்நடை வைத்திய அதிகாரிகளினால் பரிசோதிக்கப்பட்ட பின்னர், நாய்களின் பயிற்சியாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரதி பொலிஸ் மா அதிபரின் கருத்து
இதன்போது பேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா, ''இந்த நாய்கள் 08 முதல் 12 மாதங்களுக்கு இடைப்பட்டவை எனவும், 03 மாத பயிற்சியின் பின்னர் இலங்கை முழுவதிலும் உள்ள உத்தியோகபூர்வ பொலிஸ் நாய் பிரிவுகளில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
நாய்களை இறக்குமதி செய்வதால் ஏற்படும் அதிக செலவை குறைக்கும் வகையில் இந்த நாய்களை பயன்படுத்தி புதிய இனவிருத்தி செயல்முறையை இந்நாட்டில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக, இந்த நாய்கள் போதைப்பொருட்களை கண்டறிய மேல் மற்றும் தென் மாகாணங்களில் உத்தியோகபூர்வ பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, பொலிஸ் உத்தியோகபூர்வ நாய் பிரிவில் 372 நாய்கள் உள்ளதாகவும், இதில் 35 நாய்கள் பயிற்சியின் பின்னர் இந்த பொலிஸ் நாய் பிரிவில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.