மத வழிபாட்டுத் தலங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு

Priyantha Weerasooriya
By Fathima Dec 17, 2025 05:04 AM GMT
Fathima

Fathima

இலங்கையில் மத வழிபாட்டுத் தலங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, சட்டம் ஒழுங்கை பேணவும் அமைதியான சூழலை உறுதி செய்யவும் அனைத்து சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

மத வழிபாட்டுத் தலங்கள்

குறிப்பாக மத வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்க கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மத வழிபாட்டுத் தலங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு | Police Beef Up Security At Religious Sites

தங்களது பகுதிகளில் உள்ள மதத் தலைவர்களுடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இணைந்து செயல்பட்டு, வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் துணை பொலிஸ் அத்தியட்சகர்  F. U. வூட்லர் தெரிவித்துள்ளார்.

பெரிய நகரங்களில் பண்டிகை கால கொள்வனவுகளில் ஈடுபடுவோர் அதிகமாக கூடும் இடங்களிலும், பொதுமக்கள் பெருமளவில் திரளும் மதத் தலங்களிலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் மத நிறுவனங்களின் அறங்காவலர் குழுக்கள், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸ் மற்றும் முப்படை அமைப்புகளுடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளன.

பாதுகாப்பு

சந்தேகத்திற்கிடமான வாகனங்கள், நபர்கள் அல்லது பொருட்கள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கோ தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மத வழிபாட்டுத் தலங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு | Police Beef Up Security At Religious Sites

பண்டிகைக் கால பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், மேற்கு மாகாணம் முழுவதும் கூடுதலாக 2,500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதி ஓரங்களில் வாகனங்களை நிறுத்தும் போது கூடுதல் விழிப்புடன் இருக்குமாறும் தனிப்பட்ட பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொள்ளை மற்றும் திருட்டு உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க இரவு நேரங்களில் சிறப்பு பொலிஸ் ரோந்து பிரிவுகளும் செயல்படுத்தப்பட உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.