மாவடிப்பள்ளியில் வீடுடைத்து திருட்டு: சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் வீடொன்று உடைக்கப்பட்டு தங்க நகைகள் உட்பட பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று முன்தினம் (27) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், இந்த சம்பவம் குறித்து நேற்று (28) வீட்டு உரிமையாளரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேடுதல்
இதனையடுத்து, சந்தேகநபர்களை கைது செய்வதற்காக புலனாய்வு பிரிவினர் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்ற வீட்டு உரிமையாளர்கள் குடும்ப சகிதம் அருகில் உள்ள சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று அன்றைய தினம் இரவு 10 மணியளவில் தமது வீட்டிற்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் திடிரென தமது கையடக்க தொலைபேசி ஒன்றினை தேடிய நிலையில் நகைகள் வைக்கப்பட்டிருந்த அலுமாரி உட்பட அலுமாரி இருந்த அறை கதவு திறந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்துள்ளனர்.
திருடர்களின் நடமாட்டம்
பின்னர் வீட்டின் நிலைமையினை பரிசோதனை செய்த போது வீட்டின் மேல் மாடியில் இருந்த கதவு அகற்றப்பட்டு அலுமாரியில் பாதுகாக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.
உடனடியாக பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மாவடிப்பள்ளி உட்பட புறநகர் பகுதியில் அண்மைக்காலமாக திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |