நாட்டில் இனவாதம் தலைதூக்க இடமளியோம்: பிரதமர் ஹரிணி
அரசியலில் தோல்வி கண்ட சில குழுக்கள் நாட்டில் மீண்டும் இனவாதத்தைத் தூண்டுவதற்கு முயற்சிப்பதாகவும் அவற்றை தோற்கடிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (3) உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டு மக்கள் இனவாதம் மற்றும் சந்தர்ப்பவாத அரசியலை நிராகரித்துள்ளனர். தேர்தல் முடிவுகளும் அதனையே வெளிப்படுத்தின.
இனவாதம்
இந்தநிலையில், தோல்வியடைந்த அரசியல் குழுக்கள் மீண்டும் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலைக் கொண்டு செல்ல இனவாதத்தைத் தூண்டி, இனவாதக் கருத்துக்களைப் பரப்பி மக்களைப் பிளவுபடுத்த முற்படுகின்றன.
ஆனால், இனவாதம் மீண்டும் தலைத்தூக்க அரசு இடமளிக்கப் போவதில்லை. இத்தகைய செயற்பாட்டை ஒடுக்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.
அனைவருக்கும் அழைப்பு
எதிர்க்கட்சியிலும் இனவாதத்தை புறக்கணிக்கும் எதிர்க்கும் பலர் உள்ளனர். அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.
மக்கள் எம்மிடம் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அதனால் வரலாற்றின் பாடங்களை உணர்ந்து சிறந்த நாட்டை உருவாக்க ஒன்றிணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுகின்றோம். அதனைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |