நீ்ர் விநியோகம் தொடர்பில் மக்களுக்கு வெளியான அறிவிப்பு
நாட்டில் நிலவும் வறண்ட வரட்சி வானிலை காரணமாக, அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு ஒரு நாளைக்கு சில மணிநேரங்களுக்கு மட்டுமே நீர் விநியோகம் கட்டுப்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர்,
இதுவரை சபை இத்தகைய நீர் வெட்டு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்றாலும், தற்போது நிலவும் வானிலை காரணமாக எதிர்காலத்தில் நாள் முழுவதும் தண்ணீர் விநியோகம் செய்வது கடினமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
நீர் விநியோக அழுத்தம் குறைவு
கொழும்பு - அம்பத்தலே பகுதிக்கு உள்ளிட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் உற்பத்தித் திறன் இதுவரை பாதிக்கப்படவில்லை என்றாலும், மலைப்பகுதிகளுக்கான நீர் விநியோகத்தில் அழுத்தம் குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், தற்போதுள்ள நீர் இருப்பை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.
மேலும், குறைந்த அழுத்தத்தில் தண்ணீர் பெறும் பகுதிகளுக்கு லொறிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.