வெளிநாட்டு பெண்ணிடம் அத்துமீறி நடந்த நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் தகாத நடத்தையில் ஈடுபட்ட, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் குறித்த நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்ட்ட போது, பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
தகாத நடத்தை
திருக்கோவில் பகுதியில் சுற்றுலா சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவரிடம் தகாத நடத்தையில் ஈடுபட்ட, சம்பவத்தில் தேடப்பட்ட குறித்த சந்தேகநபர் நேற்று (16.11.2025) மாலை மருதமுனைப் பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் வசித்து வரும் திருமணமானவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாரால் கைது
இலங்கைக்கு சுற்றுலா வந்த நியூசிலாந்து பெண் ஒருவரிடம் அக்டோபர் 25 ஆம் திகதி சுற்றுலா சென்றிருந்தபோது ஒரு இளைஞர் தகாத நடத்தையில் ஈடுபட்டதாகக் கூறி இலங்கை சுற்றுலா பொலிஸிடம் முறைப்பாடு அளித்திருந்தார்.

இந்த சம்பவத்தின் வீடியோவையும் அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பாக சுற்றுலா பிரிவு பொலிஸார் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட வெளிநாட்டுப் பெண் அன்று அறுகம்பையிலிருந்து பாசிக்குடாவுக்குச் சென்றபோது திருக்கோவில் பகுதியில் குறித்த சம்பவம் நடந்ததாக தெரியவந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.