ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவை வழங்குவோம்: சாமர சம்பத் தசநாயக்க

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lanka Presidential Election 2024
By Mayuri Jul 26, 2024 02:52 AM GMT
Mayuri

Mayuri

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டின் நிலைமையை நாம் யாரும் மறந்துவிடவில்லை என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு எமது ஆதரவை வழங்குவோம் என கோரியுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்ட நாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்திற்குள் மீட்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, எமது அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள் நட்டமடையும் நிலையை தவிர்த்து இலாபம் ஈட்டும் நிலைக்கு வந்துள்ளன. உலகில் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள ஏனைய நாடுகள் இவ்வளவு குறுகிய காலத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மையை எட்டவில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவை வழங்குவோம்: சாமர சம்பத் தசநாயக்க | People Support To Ranil Wickramasighe

வரித் திருத்தங்கள்

இந்த ஸ்திரத்தன்மையை பேணுகின்ற அதேவேளை பொருளாதாரத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் கடந்த காலத்தில் கொண்டு வரப்பட்ட வரித் திருத்தங்கள் குறித்தும் மக்கள் மத்தியில் சில எதிர்ப்புகள் எழுந்தன.

ஆனால், அந்த முடிவுகளின் நன்மைகளை மக்கள் பெறும்போது, அந்த எதிர்ப்பு மறைந்துவிடும். உலகில் உள்ள ஏனைய நாடுகள் நம் நாட்டை விட அதிக சதவீத வரிகளை வசூலிக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். கடந்த நெருக்கடியின் போது, மக்களிடம் பணம் இருந்தது. ஆனால் வாங்குவதற்கு பொருட்கள் பற்றாக்குறையாக இருந்தது.

ஆனால் தற்போது அவ்வாறான நிலை இல்லை. எனினும், இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டின் நிலைமையை நாம் யாரும் மறந்துவிடவில்லை. எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு எமது ஆதரவை வழங்குவோம் எனக் கூறியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW