பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும்: இம்ரான்
நாட்டில் ஊழலைக் கட்டுப்படுத்தும் கொள்கையை முன்னெடுத்து வரும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி தலைமை வேட்பாளர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் இன்று (28) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பில் அமைந்துள்ள இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு பொதுமக்கள் அதிகளவில் முறைப்பாடுகள் செய்து வருகின்றனர்.
முறைப்பாடுகள்
இந்த வருடம் முதல் 9 மாத காலப்பகுதியில் மட்டும் சுமார் 3 ஆயிரம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த ஆணைக்குழுவின் தற்போதைய ஆளணி மற்றும் வசதிகள் குறைவு காரணமாக விசாரணைகளைத் துரிதப்படுத்த முடியாதுள்ளது. அதிக தாமதங்கள் ஏற்படுகின்றன.
சில விசாரணைகள் இரண்டு, மூன்று வருடங்கள் வரை செல்வதாகத் தெரியவருகின்றது. இதனால் ஊழலை விரைவாகக் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.
சட்ட நடவடிக்கை
எனவே, ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம் ஆட்சியமைக்கும் பட்சத்தில் இந்த ஆணைக்குழுவின் பணிகளை விரைவுபடுத்தும் பொருட்டு மாகாண மட்ட அலுவலகங்களை தாபிக்க நடவடிக்கை எடுப்போம். இதற்கு தேவையான சட்டத்திருத்தங்களை முன்னெடுப்போம்.
இதன்படி மேல்மாகாணம் தவிர்ந்த ஏனைய 8 மாகாணங்களிலும் மாகாண அலுவலகங்கள் தாபிக்கப்படும். இதன் மூலம் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டோருக்கு எதிராக துரிதமாக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
எனவே, பொதுமக்கள் எதிர்பார்க்கும் ஊழலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் விரைவு படுத்தமுடியும் என இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |