அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.
குடிவரவு, குடியகல்வு சட்டங்களை மீறி, சட்டவிரோதமாக தங்கம் மற்றும் கைத் தொலைபேசிகளை நாட்டுக்குள் கடத்தி வந்ததாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமை
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை எழுத்து வடிவில் சபாநாயகரிடம் முன்வைத்துள்ளார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமையை துஷ்பிரயோகம் செய்து அலி சப்ரி ரஹீம் மீண்டும் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடும் என்பதன் காரணமாக உடனடியாக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு குறித்த எழுத்து மூல கோரிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
3 1/2 கிலோ தங்கம் மற்றும் 91 ஸ்மார்ட் கைத் தொலைபேசிகளை இலங்கைக்கு கொண்டு வந்திருந்த நிலையில் நேற்று முன்தினம்
கைது செய்யப்பட்ட அவர் 7.5 மில்லியன் ரூபா அபராதம் செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.