கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்! ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலில் காவல்துறையினர் படுகாயம்
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் தற்போது பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் நடத்தும் ஆர்ப்பாட்டம் காவல்துறையினரை தாக்கும் அளவிற்கு உச்சம் பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
"அடக்குமுறைக்கு எதிராக" என்ற பெயரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடத்திய போராட்டத்தால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறைந்தளவானவர்கள் மட்டுமே செல்ல அனுமதி
நீதிமன்ற வளாகத்திற்குச் செல்லும் வீதி பாதுகாப்புப் படையினரால் மூடப்பட்டு, குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
இருப்பினும், நீதிமன்ற வளாகத்திற்குச் செல்லும் பராக்ஸ் மாவத்தை நோக்கிய காவல்துறை சாலைத் தடைகளை மீறி எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே நுழைய முயற்சித்துள்ளனர்.
உஷார் நிலையில் காவல்துறை
இதற்கிடையில், காவல்துறை நீர் பீரங்கிகள், கலகத் தடுப்பு காவல்துறையினர் மற்றும் காவல்துறை சிறப்புப் படை அதிகாரிகளும் உஷார் நிலையில் உள்ளனர்.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விரைவில் தனது சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க உள்ளார்.
பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதியை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய பின்னர், இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.