அரிசி மாபியாக்களை கூட்டுறவு துறையால் மாத்திரமே கட்டுப்படுத்த முடியும்..!

Sri Lankan Peoples Northern Province of Sri Lanka
By Independent Writer May 10, 2025 11:25 PM GMT
Independent Writer

Independent Writer

அரிசி மாபியாவை கூட்டுறவுத் துறையால் மாத்திரமே கட்டுப்படுத்துவதற்கு முடியும். தனியார் துறையினர் இலாபத்தை மாத்திரமே அடிப்படையாகக் கொண்டே செயற்படுவர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இளம் ஆய்வாளர்கள் வலையமைப்பு நடத்திய இளம் கூட்டுறவாளர் மாநாடு தந்தை செல்வா அரங்கில் நேற்று (10.05.2025) இடம்பெற்றது.

இதன்போது ஆளுநர் தனது உரையில், "1970 – 1980 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் முன்னுதாரணமாகச் சொல்லப்படக்கூடிய வகையில் வடக்கு மாகாணத்தின் கூட்டுறவுத்துறை செயற்பட்டது.

இங்குள்ள எமது விவசாயிகளின் விவசாய உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்து கொழும்புக்கு கொண்டு சென்று விற்பார்கள்.

முஸ்லிம் சமூகத்தின் துஆ தான் என்னை காப்பாற்றியது! வைத்தியர் ஷாபி

முஸ்லிம் சமூகத்தின் துஆ தான் என்னை காப்பாற்றியது! வைத்தியர் ஷாபி

தனியார் துறை

திரும்பி வரும் போது எமது மக்களின் நுகர்வுக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்து கொண்டு வந்து, பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக விற்பனை செய்வார்கள். அன்றைய காலத்தில் தனியார் துறையினர் நலிவடைந்திருந்தனர். காலப்போக்கில் போர் காரணமாக கூட்டுறவுத்துறை நலிவடையத் தொடங்கியது.

ஒரு காலத்தில் அரசாங்கத்தின் நிவாரணங்களை வழங்கும் மையமாக பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் இயங்கத் தொடங்கின. தற்போது தனியார்துறையினர் பலமடைந்துள்ள நிலையில் அவர்களுடன் போட்டிபோட முடியாத நிலைமைக்கு எமது பல நோக்குக் கூட்டுறவுச் சங்கள் பலவீனமடைந்துள்ளன.

பல சங்கங்கள் தங்களிடமுள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களின் இலாபம் ஊடாகவே பணியாளர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குகின்றார்கள்.

எங்களது கூட்டுறவு பலவீனமடைவதற்கு போர் காரணமாக இருந்தாலும் போரின் பின்னரும் அவர்களால் முன்னைய நிலைமைக்கு வரமுடியவில்லை. இதில் விதிவிலக்காக பனை – தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் செயற்படுகின்றன.

அவர்கள் இப்போதும் சிறப்பாகவும் ஆக்பூர்வமாகவும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். தலைமைத்துவத்தில்தான் ஒவ்வொன்றினதும் வெற்றி தோல்வி தங்கியிருக்கின்றது. தூரநோக்குடன், துணிந்து செயற்பட வேண்டும்.

நீதி, சமத்துவம் மற்றும் அடக்குமுறை : இஸ்லாமிய ஆட்சி முறையின் விளக்கம்

நீதி, சமத்துவம் மற்றும் அடக்குமுறை : இஸ்லாமிய ஆட்சி முறையின் விளக்கம்

கூட்டுறவுத்துறை

அதேபோல புத்தாக்க சிந்தனையுடன் இயங்க வேண்டும். ஆனால் அத்தகைய தலைமைத்துவங்கள் கூட்டுறவுக்கு கிடைக்காமையால் அவை சரிவைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன.

நான் மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலங்களில் கூட்டுறவுத்துறையைப் பலப்படுத்துவதற்காக அவர்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக பல்வேறு உபகரணங்களைப் பெற்றுக்கொடுத்திருக்கின்றேன். அரிசி ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்முயற்சிக்கான வளங்களைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றேன்.

ஆனால் அவர்கள் அதனைப் பயன்படுத்தி தங்களை முன்னேற்றவில்லை. மாறாக தவறான முகாமைத்துவம் காரணமாக அவை மூடப்படவேண்டிய நிலைமைக்குத்தான் வந்திருக்கின்றன. அந்த உபகரணங்களை பூட்டி வைத்திருந்தார்கள்.

தலைமைத்துவங்கள் சரியாக அமையாததால் இந்த நிலைமை ஏற்பட்டது. கடந்த காலங்களில் அரசாங்கம் கர்ப்பிணிகளுக்கான உணவுப் பொருட்களை வழங்கியிருந்தது. இதனை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கள் ஊடாகவும் வழங்க நான் நடவடிக்கை எடுத்திருந்தேன்.

சில சங்களால் அவற்றை வெற்றிகரமாகச் செய்ய முடிந்தது. சில சங்களால் அது முடியாமல் போனது. பொறிமுறை சரியாக இருந்தாலும் தலைமைத்துவம் ஒழுங்காக இல்லை என்றால் இப்படித்தான் நடைபெறும். கூட்டுறவின் அடிநாதமே சேர்ந்து செயற்படுவதுதான்.

காரைதீவு பிரதேச சபைக்கு மீண்டும் தெரிவாகும் தலைமைகள்..!

காரைதீவு பிரதேச சபைக்கு மீண்டும் தெரிவாகும் தலைமைகள்..!

அரிசி மாபியா

ஆனால் இப்போது கூட்டுறவில் சேர்ந்தாலும் தனிப்பட்ட ரீதியில் தாங்கள் என்ன இலாபத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நோக்கத்தில்தான் செயற்படுகின்றனர். இதனால் தான் கூட்டுறவுத்துறையைப் பலப்படுத்த முடியாமல் இருக்கின்றது.

கூட்டுறவுத்துறைக்கு இளையோர் அதிகளவில் வரவேண்டும் என்று விரும்புவதற்குக் காரணம் இருக்கின்றது. அவர்கள் புத்தாக்கமாக சிந்திப்பவர்கள். அத்துடன் துணிவுடன் - வேகமாக செயலாற்றுவார்கள். அவர்களால் தான் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

அரிசி மாபியாவைக் கட்டுப்படுத்துவதற்காக, கூட்டுறவு அபிவிருத்தி வங்கி ஊடாக நெல் கொள்வனவுக்கு நாம் கடன்களை வழங்குகின்றோம்.

நெல்லுக்கான நிர்ணய விலையை விட கூடுதலான விலைக்கு விவசாயிகளிடமிருந்து வேறு மாகாண தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லைக் கொள்வனவு செய்கின்றார்கள்.

விவசாயிகளும் தமக்கு கூடுதலான இலாபம் கிடைக்கின்றது என விற்பனை செய்கின்றார்கள். அவர்கள் இவ்வாறு கொள்வனவு செய்யும் நெல்லை பதுக்கி வைத்திருந்து, அரிசிக்கான விலையை தீர்மானிப்பவர்களாக மாறுகின்றார்கள்.

கடந்த காலங்களில் நெல் அறுவடையின்போது அரிசியின் விலை குறைவடையும். ஆனால் தற்போது அரிசியின் விலையில் மாற்றமில்லை.

இவ்வாறு தனியார் அரசியின் விலையை தீர்மானிப்பதை மாற்றியமைப்பதற்கு எமது கூட்டுறவு அமைப்புக்களை வலுப்படுத்த வேண்டும்.

அவர்கள் எங்கள் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்து சிறியதொரு இலாபத்துடன் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக சந்தை விலையை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்யும்போது மக்கள் பயனடைவார்கள்.

அரிசி மாபியாவையும் கட்டுப்படுத்த முடியும். இவ்வளவு வலிமையான கூட்டுறவுத்துறையை மீண்டும் வளர்த்தெடுப்பதற்கு தலைமைத்துவப்பண்புள்ள இளையோர் அதிகளவில் இணைந்துகொள்ளவேண்டும்.

இங்கு வடக்கு, கிழக்கு, மலையகத்தைச் சேர்ந்த இளையோர் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு கூட்டுறவுத்துறையைப் பலப்படுத்த வேண்டும், என்றார் ஆளுநர். ஆளுநரின் உரையைத் தொடர்ந்து இளம் ஆய்வாளர்களால் ஆளுநரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கான பதில்களையும் ஆளுநர் வழங்கினார். 

முழு கிழக்கிலும் முன்னிலை பெற்றுள்ள கட்சிகள் தொடர்பிலான விபரங்கள்

முழு கிழக்கிலும் முன்னிலை பெற்றுள்ள கட்சிகள் தொடர்பிலான விபரங்கள்

அமெரிக்க போர் விமானத்தை தாக்கிய ஏமன் ஹவுதிக்கள்

அமெரிக்க போர் விமானத்தை தாக்கிய ஏமன் ஹவுதிக்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW