சாதரண தர பரீட்சையின் போது இடம்பெற்ற முறைகேடு: ஆசிரியர் கைது
கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற சாதரண தர பரீட்சையின் ஆங்கில பாட வினாத்தாளை வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்த தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, இன்று(12) கண்டிப் பிரிவின் கணினி குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் படி, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இந்த ஆசிரியர் மஹியங்கனை புஹுல்யாய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும், அவரின் தாயார் ஹசலக்க பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் முன்னாள் அதிபர் எனவும் தெரியவந்துள்ளது.
விசேட விசாரணை
அதேவேளை, இந்த தனியார் ஆசிரியர் மற்றும் அவரது தாயாருக்கு சொந்தமான இரண்டு கையடக்க தொலைபேசிகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆசிரியரின் வாட்ஸ்அப் வலையமைப்புடன் சுமார் ஆயிரம் மாணவர்கள் தொடர்பில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதுடன், ஹசலக்க காவல்துறையினர், கண்டி பிரிவு கணினி குற்றப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து விசேட விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.