அரசாங்கம் மிகுந்த பதற்றத்தில் இருக்கிறது! நாமல் பெருமிதம்
தனக்கு கிடைக்கும் சர்வதேச மற்றும் உள்ளூர் வரவேற்பை கண்டு அரசாங்கம் தற்போது மிகுந்த பதற்றத்தில் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு நாமல் ராஜபக்ச, நேற்று வருகை தந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பெரும் கலக்கம்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,''அண்மையில் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு கலிங்கா பல்கலைக்கழகத்தில் (KIIT) தாம் ஆற்றிய சிறப்பு விரிவுரை அரசாங்கத்திற்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பல்கலைக்கழகத்தில் உரையாற்ற தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை கண்டு அரசாங்கம் ஆச்சரியப்பட தேவையில்லை என்றும், இது ஒரு ஆரம்பம் மட்டுமே எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான இன்னும் பல விரிவுரைகள் அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் தற்போதைய ஆட்சி முறையை மாற்றுவதாக கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று முழு அமைப்பையும் சீரழித்துக் கொண்டிருப்பதாகவும், அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் எதிர்ப்பை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.