ஓய்வூதியம் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு
தொழில் செய்யும் சகலருக்கும் ஓய்வூதியம் அல்லது ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பன கிடைக்கும் வகையில் யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.
கூலித்தொழிலாளி என்ற பெயரை இல்லாமல் செய்து, அவர்களுக்கு கௌரவமான தொழில் அந்தஸ்தை வழங்கும் நோக்கில் இந்த யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொழிலாளர்கள் தரத்தை உயர்த்தும் திட்டம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவையில் இவ்விடயம் குறித்த யோசனை முன்மொழியப்படும். தொழிலாளர்களின் தரத்தை உயர்த்தும் உன்னத திட்டங்களில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.
இதில் கவர்ச்சியுற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச மற்றும் தேசிய மட்ட தலைவர்கள் பலர், மே தினத்தின் பின்னர் எம்முடன் இணைந்து கொள்வர்.
நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான ஐயப்பாடுகளால், ஐக்கிய மக்கள் சக்தியின் சிலர், எம்மோடு இணைய தயக்கம் காட்டி வருகின்றனர். இருந்தபோதிலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பலர் இணைந்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |