இலங்கையின் சுற்றுலா விசா திட்டம் தொடர்பில் மாலைதீவு பயணிகளுக்கு விசேட அறிவித்தல்
இலங்கையின் சுற்றுலா விசா திட்டத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் குறித்து மாலைதீவு பயணிகளுக்கு அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெளிவுப்படுத்தியுள்ளது.
இலங்கையில் புதிய இ-விசா(e-visa) முறைமை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாலைதீவு பயணிகளுக்கு சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வதற்காக இலங்கை அரசுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றில் தெளிவுபடுத்தியுள்ளது.
தற்போது, மாலைதீவு மக்கள் இலங்கைக்கு வந்தவுடன் 30 நாள் சுற்றுலா விசாவை இலவசமாகப் பெற முடியும் என்றும், 30 நாட்களுக்கு மேல் தங்குவதற்கு, அவர்கள் 6 மாத இலவச விசாவிற்கு நிகழ்நிலை(online) ஊடாக விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
விசா நீடிப்பு
ஏற்கனவே இலங்கையில் இருக்கும் மாலைதீவை சேர்ந்த விசா நீடிப்பு தேவைப்படுபவர்கள் கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகராலயத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலைத்தீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தற்போதைய உடன்படிக்கையை பிரதிபலிக்கும் மற்றும் பயணிகளுக்கு பரஸ்பரத்தை உறுதிப்படுத்தும் விசா நடைமுறையை நிறுவுவதற்கு தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கைக்கு விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ள மாலைதீவு மக்கள் மேலதிக உதவிகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சுடன் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.