கனியவள கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைகளில் போதுமான எரிபொருள் கையிருப்பில் இல்லை
இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தில் பல்வேறு கோளாறுகள் மற்றும் முறைகேடுகள் உள்ளதாக கோப் எனப்படும் அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக்குழு கண்டறிந்துள்ளது.
அத்துடன் அவசர தேவைகளுக்கு கனியவள கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைகளில் போதுமான எரிபொருள் கையிருப்பில் இல்லை என்றும் அந்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.
கனியவள கூட்டுத்தாபனத்தில் நிலவும், பல நிர்வாக திறமையின்மைகள் மற்றும் முறைகேடுகளை ஆராய்வதற்காக கோப் குழு, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரன மற்றும் கூட்டுத்தாபனத் தலைவர் சாலிய விக்ரமசூரிய உட்பட பல அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
அவர்களுடனான கூட்டத்தின்போது கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் கூட்டுத்தாபனத்தின் தற்போதைய செயல்திறன் ஆகியவை குறித்தும் ஆராயப்பட்டன.
இதன்போது கோப் குழு எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கூட்டுத்தாபனத்தின் அதிகாரி ஒருவர், நாட்டில் அவசரகால சூழ்நிலையில் பயன்படுத்துவதற்கு 60 ஆயிரம் மெட்ரிக் டன் டீசலும், 45 ஆயிரம் மெட்ரிக் டன் பெற்றோலும் கையிருப்பில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.