தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுந்தீவு படகுச் சேவை : தொடரும் சிக்கல்
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பிலிருந்த நெடுந்தீவுக்கான கடற் போக்குவரத்து தற்போது தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபடும் அரச படகுச்சேவை கடந்த வெள்ளிக்கிழமை (03) தொடக்கம் தனியார் கையில் வந்துள்ளதுடன் தொடர்ந்தும் இவ்வாறான நிலையே தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பிலுள்ள படகுகளில் ஒன்றான குமுதினி படகு திருத்தவேலை காரணமாக சேவையில் ஈடுபடுவதில்லை.
அத்துடன் வடதாரகை படகு திருத்த வேலைக்காக திருகோணமலையில் நெடுந்தாரகை திருத்த வேலைக்காக நெடுந்தீவிலும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அரச படகுகள் சேவையில் இருந்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் தனியார் படகான கரிகணன் படகே தற்போது பயணிகள் சேவையில் இணைந்ததுள்ளதுடன் வழமையான காலை11.30 மணி படகுச் சேவையினை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பண்டிகைக்காலம் நெருங்கிவரும் நிலையில் காலை11.30 மணி சேவை நிறுத்தப்பட்டதால் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
படகு சேவைகள் தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் உரிய திட்டமிடல் இன்றி செயற்பட்டு வருவதுடன் பயணிகள் சேவைக்காக மாற்று ஏற்பாடுகள் செய்வது தொடர்பிலும் அக்கறை இன்றி இருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.