மன்னார் கடலில் புதைந்து கிடக்கும் இயற்கை எரிவாயு வளம் - இலங்கையின் புதிய முயற்சி

Fuel Price In Sri Lanka Sri Lankan Tamils Mannar Sri Lanka
By Aanadhi Aug 27, 2026 10:06 AM GMT

இலங்கையின் கடற்பரப்பிற்கு உரித்தான மன்னார் படுகையில் 2026ஆம் ஆண்டுக்கான எண்ணெய் ஆய்வு நடவடிக்கைகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தை இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரசபை (CPDA) ஆரம்பித்துள்ளது.

இலங்கையின் கடல்சார் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை கண்டறியும் நோக்கில், இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ், மன்னார் படுகையில் சுமார் 34,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கிய நான்கு ஆய்வுப் பிரிவுகள் சர்வதேச எரிசக்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளன.

2 பில்லியன் பீப்பாய் பெற்றோலிய வளம் கண்டுபிடிப்பு

சர்வதேச நிறுவனங்கள் நவீன புவியியல் ஆய்வு முறைகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளவும், CPDA வசமுள்ள புவியியல் தரவுகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படும் என்று அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் நீல் டி சில்வா தெரிவித்துள்ளார்.

மன்னார் கடலில் புதைந்து கிடக்கும் இயற்கை எரிவாயு வளம் - இலங்கையின் புதிய முயற்சி | Natural Gas Resources In The Sea Of Mannar

முன்னதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், மன்னார் படுகையில் பெற்றோலியமும் இயற்கை எரிவாயுவும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய மதிப்பீடுகளின்படி, மன்னார் படுகையில் சுமார் 2 பில்லியன் பீப்பாய் அளவிலான பெற்றோலிய வளங்களும், 9 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு வளங்களும் அகழ்வின் மூலம் மீட்டெடுக்கக்கூடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கையானது, சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதுடன், இலங்கையின் கடல்சார் பெற்றோலிய வளங்களை மேலதிகமாக ஆய்வு செய்வதற்கும் நாட்டின் எரிசக்தித் துறையின் வளர்ச்சிக்கும் முக்கிய முன்னேற்றமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.