தேசிய குறைந்தபட்ச சம்பளம் 5000 ரூபாவால் அதிகரிப்பு
தேசிய குறைந்தபட்ச சம்பளத்தை 5000 ரூபாவினால் அதிகரிப்பதற்காக தேசிய குறைந்தபட்ச சம்பள சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, தற்போதைய தேசிய குறைந்தபட்ச ஊதியம் 12,500 ரூபாயில் இருந்து 17,500 ரூபாயாக உயரும். தேசிய குறைந்தபட்ச தினக்கூலி 500 ரூபாயில் இருந்து 700 ரூபாயாக 200 ரூபாவினால் அதிகரிக்கப்படும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளின்படி நியமிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகள் அடங்கிய முத்தரப்பு துணைக் குழுவால் இந்த ஊதிய உயர்வுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.