நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ள மூலிகை வளர்ப்பு திட்டம்
நாட்டில் தற்போது தேசிய மூலிகை சாகுபடி திட்டம் மற்றும் மூலிகை சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் மருந்து உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்காக ஆண்டுதோறும் வெளிநாடுகளில் பெரும் தொகை செலவிடப்படுகிறது.
மேலும், அந்த பணத்தை உள்ளூரில் சேமிக்கவும், மருந்து உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை உள்ளூரில் பெறவுமே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மூலிகை வளர்ப்பு திட்டம்
மூலிகைச் சாகுபடி மூலம் சமூகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் சுகாதார மற்றும் ஊடக அமைச்சினால் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் மூலிகைத்தோட்ட மேம்பாட்டுத் திட்டம் நாளை (26) காலை 10.00 மணிக்குத் தொடங்கி வைக்கப்படும்.
இந்த நிகழ்வு, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், குருநாகல் மாவட்டத்தின் நிகவெரட்டியவில் உள்ள "ரந்தேனிகம" மூலிகைத் தோட்டத்தில் நடைபெற உள்ளது.
இந்த தேசிய திட்டத்தின் கீழ் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் கருத்திட்டத்தின்படி செயல்படுத்தப்பட்டு, இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான தீவு முழுவதும் 3 மூலிகைத் தோட்டங்களை, மேற்படி கூட்டுத்தாபனத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் வணிக மூலிகைத் தோட்டங்களாக அபிவிருத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நடைமுறை
சுகாதார அமைச்சின் கீழ் உள்ள சுதேச மருத்துவப் பிரிவு, ஆயுர்வேதத் துறை, தீவின் அனைத்து மாகாண ஆயுர்வேதத் துறைகள், மூலிகைத் தோட்டங்கள், அனைத்து ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவமனைகள் மற்றும் அனுராதபுரம் சமூக சுகாதார மேம்பாட்டு சேவை ஆகியவை இந்தத் திட்டத்தின் கீழ் இயங்குகின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ், தீவின் அனைத்துப் பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இணைக்கப்பட்டுள்ள உள்ளூர் மருத்துவ மேம்பாட்டு அதிகாரிகளின் பங்களிப்பும் செயல்படுத்தப்படுகிறது.
அத்தோடு இந்த தேசிய மூலிகை சாகுபடி திட்டத்தை, பாரம்பரிய மருத்துவர்கள், ஆயுர்வேத பாதுகாப்பு கவுன்சில்கள், கிராமப்புற சமூக அடிப்படையிலான அமைப்புகள், மூலிகை விவசாயிகள் மற்றும் இலங்கை ஆயுர்வேத மருந்துகள் உற்பத்தி கூட்டுத்தாபனம் உட்பட அனைத்து அரசு நிறுவனங்களையும் உள்ளடக்கிய ஒரு விரிவான திட்டமாக நாடு முழுவதும் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |