இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்கு கிடைத்த அங்கீகாரம்
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க “எ ”- தரத்தின் கீழ் மத்திய வங்கியாளர் தர பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
சர்வதேச மத்திய வங்கியின் ஆளுநர்களின் பெயர்களை “குளோபல் ஃபைனான்ஸ்” சஞ்சிகை அண்மையில் வெளியிட்டுள்ளது.
இதன்படி, "எ-" தரம் பெற்ற வங்கி ஆளுநர்கள் வரிசையில் கொலம்பியா, டொமினிகன் குடியரசு, ஐஸ்லாந்து, இந்தோனேஷியா, மெக்சிக்கோ,மொராக்கோ, நோர்வே, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா ஆகியவற்றின் ஆளுநர்களுடன் இலங்கையின் நந்தலால் வீரசிங்கவும் இடம்பெற்றுள்ளார்.
2023ஆம் ஆண்டு, முழு மத்திய வங்கியாளர் அறிக்கை, மற்றும் தரப்பட்டியல் குளோபல் ஃபைனான்ஸ் அக்டோபர் இதழிலும், “GFMag.com” இணையத்திலும் பிரசுரிக்கப்படுள்ளன.
ஆளுநர்களின் தரங்கள்
1994 ஆம் ஆண்டு முதல் குளோபல் ஃபைனான்ஸால், ஆண்டுதோறும், ஐரோப்பிய ஒன்றியம், கிழக்கு கரீபியன் மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளின் வங்கிகள் உட்பட 101 முக்கிய நாடுகள், பிரதேசங்கள் மற்றும் மாவட்டங்களின் மத்திய வங்கி ஆளுநர்கள் தரப்படுத்தப்படுகின்றனர்.
அதேவேளை பணவீக்கக் கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி இலக்குகள், நாணய நிலைத்தன்மை மற்றும் வட்டி விகித மேலாண்மை ஆகியவற்றில் வெற்றி தோல்வி என்ற அடிப்படையில், எ+, எ, எ- உட்பட எஃப் வரையிலான அளவின் அடிப்படையில் தரங்கள் அறிவிக்கப்படுகின்றன.
மத்திய வங்கியாளர் அறிக்கையின்படி, 2023 இல் "எ+ தரத்தை, இந்தியாவின் ஸ்ரீ சக்திகாந்த தாஸ், சுவிட்சர்லாந்து தோமஸ் ஜே. ஜோர்டான் மற்றும் வியட்நாமின் நுயென் டி ஹாங் ஆகியோர் பெற்றுள்ளனர்.
அதேவேளை "எ" தரத்தினை, பிரேசில், இஸ்ரேல்,மொரீஷியஸ், நியூசிலாந்து,பராகுவே, பெரு ,தைவான், உருகுவே உட்பட்ட நாடுகளின் மத்திய ஆளுநர்கள் பெற்றுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.