மக்களுக்காக நாமல் விடுத்துள்ள கோரிக்கை
டிட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் நாடாளுமன்றை உடன் கூட்டுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் அவர் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
சீரற்ற காலநிலை
நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 16 இன் அடிப்படையில் பிரதமருக்கான அதிகாரங்களின் பிரகாரம் நாடாளுமன்றத்தை கூட்ட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மழை வெள்ளம், மண் சரிவு காரணமாக பாதிப்பு ஏற்பட்டதுடன் உயிர் மற்றும் உடைமை சேதங்கள் ஏற்பட்டிருந்தன.
கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடித்துறை கைத்தொழியத்துறை, சுயதொழில்கள், சுற்றுலாத்துறை, ஏற்றுமதி வணிக நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த சீரற்ற கால நிலையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.
இந்த பாதிப்புகள் மக்களின் வாழ்க்கையை போலவே நாட்டின் பொருளாதாரத்தையும் மோசமாக பாதித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பாதிப்புகள் தொடர்பில் இதுவரையில் உரிய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இயல்பு வாழ்க்கை
இவ்வாறான அனர்த்த நிலைமைகளின் மத்தியில் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அனர்த்த நிலைமைகள் தொடர்பில் ஏற்கனவே பல்வேறு பங்களிப்புகளை வழங்கி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்பதற்கு அரசாங்கம் இதை விட கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் நாடாளுமன்றத்தை கூட்டி கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு பிரதமரிடம் மிக வினயமாக கேட்டுக் கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கடிதம் ஒன்றின் மூலம் கோரியுள்ளார்.