நஃபில்களையும் அதிகம் சேமியுங்கள்
அண்ணல் நபி அவர்கள் அருள தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூஹீரைரா(ரலி) அவர்கள் அறிவிப்பதாவது,
கியாமத் நாளன்று மனிதனுடைய அமல்களில் எல்லாவற்றிற்கும் முதன்மையான பர்ளு தொழுகை பற்றி கேள்வி கணக்கு கேட்கப்படும்.
அத்தொழுகை சரியாக இருக்குமேயானால் அம்மனிதர் வெற்றியும் ஈடேற்றமும் பெறுவார்.
ஒருக்கால் அத்தொழுகை வீணாணதென நிரூபணமாகிவிட்டால் அவர் தோல்வியும் நஷ்டமும் அடைந்தவராவார்.
அன்றி தொழுகையில் ஏதும் குறைவிருந்தால் அல்லாஹ்தஆலா
”இவ்வடியானிடம் ஏதேனும் நபில்களும் இருக்கின்றனவா என்பதை பாருங்கள்! அதனால் பர்ளுகளை பூர்த்தி செய்துவிடுங்கள்”
எனக் கூறுவான்.
அவ்வாறு நபில்கள் இருந்தால் அவற்றைக் கொண்டு பர்ளுகளில் உள்ள குறைகள் பூர்த்தி செய்யப்படும்.
அதற்கு பிறகு இதே போன்று மற்ற அமல்கள் நோன்பு, ஜகாத் முதலியவற்றின் கேள்வி கணக்கும் நடைபெறும் இந்த ஹதீஸிலிருந்து மனிதன் தன்னிடத்தே நபில்களின் சேமிப்பும் போதிய அளவு வைத்துக்கொள்வது அவசியம் என தெரிகிறது.
ஏனெனில் பர்ளுகளில் ஏதேனும் குறைவு ஏற்பட்டால் அதனை கொண்டு மீஜானை நிறைவு செய்து கொள்ளலாம்.
நாம் பர்ளுகளை சரிவர நிறைவேற்றி விட்டால் அதுவே பெரிய காரியம், நபில்கள் தொழுவதெல்லாம் பெரிய மனிதர்களுடைய வேலை என்று பெரும்பாலோர் கூறிவிடுகின்றனர்.
பர்ளுகளை பரிபூரணமாக நிறைவேற்றிவிட்டாலே அதுவே போதுமானது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை தான்.
ஆயினும் அவைகளை முழுமையாக ஆற்றி அவற்றின் ஒவ்வொரு பகுதியையும் சம்பூரணமாக நிறைவேற்றி விடுவதென்பது இலேசான காரியமா என்ன?
எனவே தான் அவற்றில் ஒரு சிறிதாவது குறைபாடு நிகழத்தான் செய்யும் என்றிருக்கும் போது அதனை பூர்த்தி செய்வதற்காக வேண்டி நபில்களை தவிர வேறு வழியில்லை.