திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த மியன்மார் அகதிகள் படகு
முல்லைத்தீவு (Mullaitivu) -முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 102 பயணிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு திருகோணமலை- அஷ்ரப் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த அகதிகள் படகானது இன்று (20) காலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் குறித்த படகில் வந்தவர்களை திருகோணமலை (Trincomalee) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் நாமகள் வித்தியாலயத்தில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உலர் உணவுப்பொருட்கள்
அத்துடன், அவர்களுக்கான உணவு உட்பட ஏனைய வசதிகளை திருகோணமலை பட்டணம் சூழலும் பிரதேச செயலகம் முன்னெடுத்து வருவதோடு ஏனைய அரச திணைக்களங்களும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் மியன்மார் நாட்டுப் படகொன்று கரையொதுங்கியுள்ளதுடன் அந்தப் படகில் 102 மியன்மார் நாட்டு பிரஜைகள் உள்ளதாகவும், இதில் 35 பேரளவில் சிறுவர்களெனவும், கற்பிணித் தாய்மார்கள், முதியவர்களும் அதில் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நேற்றையதினம் முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைக்கு விரைந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த கப்பலில் இருக்கும் அகதிகளுக்கு அப்பகுதி கடற்றொழில் சங்கத்தினருடன் இணைந்து படகில் சென்று பார்வையிட்டிருந்ததுடன் அவர்களுக்கான உலர் உணவுப்பொருட்களும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |