இந்தியாவில் உயர் கல்வி படிக்கும் இஸ்லாமிய மாணவர்களின் விகிதம் குறைவு! ஆய்வு தகவல்
இந்தியாவில் உயர் கல்வி படிக்கும் இஸ்லாமிய மாணவர்களின் விகிதம், 2020-21 இல் எஸ்சி, எஸ்டி-யினரின் விகிதத்தைவிட குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயர் கல்விக்கான அகில இந்திய ஆய்வு (AISHE) சார்பில் 2020-21-க்கான கணக்கெடுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கக்கூடிய AISHE-ன் கணக்கெடுப்பின்படி, 2020-21-ல் உயிர் கல்வி பயிலும் இஸ்லாமிய மாணவர்கள் 8% குறைந்துள்ளனர்.
உயர் கல்விக்கான அகில இந்திய ஆய்வு தரவுகள்
இதேவேளை ஓபிசி பிரிவு 4 சதவீதமும், எஸ்சி பிரிவு 4.2 சதவீதமும், எஸ்டி பிரிவு 11.9 சதவீதமும் உயர்ந்துள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உயர் கல்வி பயில சென்ற இஸ்லாமிய மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 79 ஆயிரம் மட்டுமே.
உத்தரப் பிரதேசத்தில் 36 சதவீதமும், ஜம்மு காஷ்மீரில் 26 சதவீதமும், மகாராஷ்ட்டிராவில் 8.5 சதவீதமும், தமிழகத்தில் 8.1 சதவீதமும் இஸ்லாமிய மாணவர்களின் உயர் கல்வி விகிதம், அதற்கு முந்தைய ஆண்டை விட சரிந்துள்ளது.
ஆம் ஆத்மி ஆட்சியில் டெல்லி மாநிலம் கல்வியில் முன்னேறி இருப்பதாகக் கூறப்படுகிறது. இருந்தும் அங்கு 12-ம் வகுப்பு முடித்த இஸ்லாமிய மாணவர்களில் 20 சதவீதம் பேர் உயர் கல்விக்குச் செல்லவில்லை.
அதேபோன்று உத்தரப் பிரதேசத்திலும் உயர் கல்வி நிறுவனங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இருந்தும் அங்கு இஸ்லாமிய மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைந்துள்ளது.
உயர் கல்வி பயிலும் பெண்கள் அதிகம்
கேரளாவில் மட்டுமே இஸ்லாமிய மாணவர்களின் உயர் கல்வி விகிதம் 43% என்ற நல்ல நிலையில் உள்ளது.
உயர் கல்வி பயிலும் மாணவர்களில் 36 சதவீதம் பேர் ஒபிசி வகுப்பையும், 14 சதவீதம் பேர் எஸ்சி வகுப்பையும் சேர்ந்தவர்கள். இந்தியாவில் இஸ்லாமியர்களின் விகிதம் 14% ஆக உள்ள போதிலும், உயர் கல்வி பயிலும் இஸ்லாமியர்கள் 4.6 சதவீதம் மட்டுமே உள்ளனர்.
இதில், ஆச்சரியம் தரும் விடயமாக, இஸ்லாமிய ஆண்களைவிட பெண்கள் அதிக எண்ணிக்கையில் உயர் கல்வி பயில்கிறார்கள். உயர் கல்வி பயிலும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை குறைவதால், அது ஆசிரியர்களின் எண்ணிக்கையிலும் பிரதிபலிக்கிறது.

ஆசிரியர்களில் பொதுப் பிரிவினர் 56 சதவீதம் உள்ளனர். ஓபிசி 32 சதவீதமும், எஸ்சி 9 சதவீதமும், எஸ்டி 2.5 சதவீதமும் உள்ளனர். இஸ்லாமியர்கள் 5.6 சதவீதம் உள்ளனர். ஆசிரியர்களில் 100 ஆசிரியர்களுக்கு 75 ஆசிரியைகள் மட்டுமே உள்ளனர். ஓபிசி பிரிவில் 100 ஆசிரியர்களுக்கு 71 ஆசிரியைகளும், எஸ்டி பிரிவில் 100 ஆசிரியர்களுக்கு 75 ஆசிரியைகளும் உள்ளனர்.
மேலும் முஸ்லிம் ஆசிரியர்களில் 100 ஆண் ஆசிரியர்களுக்கு, 59 பெண் ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.
2020-21ல் உயர் கல்வியில் சேர்ந்தவர்கள் மொத்தம் 41 லட்சத்து 38 ஆயிரத்து 71 பேர். இதில், ஆண் மாணவர்களின் விகிதம் 51.33, மாணவிகளின் 48.67 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.