முஸ்லிம் பெண் ஊழியர்களின் கலாசார உடையை விவகாரம்! எதிர்க்கும் இம்ரான் எம்.பி

Trincomalee Imran Maharoof Eastern Province
By Dharu Aug 01, 2025 11:17 AM GMT
Dharu

Dharu

சுகாதாரத்துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாசாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வழங்கியுள்ள உத்தரவு ஏற்றுக்கொள்ளமுடியாதது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் கடமையாற்றும் முஸ்லிம் தாதியர்கள், மருத்துவ மாதுக்கள் மற்றும் சிற்றூழியர்கள் இனிமேல் கலாச்சார ஆடை அணிந்து கடமைக்கு வர கூடாது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட அலுவலர்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

கடமை ஏற்றது முதல் தற்போது ஓய்வூதியம் பெறும் வயதையும் அடைந்துள்ள இதுவரையான காலத்தில் சீருடையுடன் கலாச்சார உடையும் சேர்த்து அணிந்தே அவர்கள் கடமைகளை முன்னெடுத்து வருவதாக இம்ரான் மகரூப் விளக்கியுள்ளார்.

உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை

ஆனால் தற்போது கலாச்சார உடை அணிந்து கடமைக்கு வர கூடாது என்றும் இதை மீறும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எமக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, இதனைக் கவனத்தில் எடுத்து எமக்கு நியாயம் பெற்றுத் தாருங்கள் என இதனால் பாதிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இனவாதம் இல்லாத ஆட்சி என மேடைக்கு மேடை கூறி கொள்ளும் இந்த அரசாங்க காலத்தில் எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் முஸ்லிம் பெண்களின் ஆடை விடயத்தில் இனவாத போக்கை கையில் எடுத்துள்ள அரச அதிகாரிகளுக்கு எதிராக இந்த அரசு நடவடிக்கை எடுக்குமா அல்லது இந்த உத்தரவின் பின்னால் இந்த அரசு தான் உள்ளதா என்ற சந்தேகம் உருவாகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த பதவிகளுக்குரிய சீருடைக்கு மேலதிகமாக முஸ்லிம் பெண் ஊழியர்கள் தமது கலாச்சார ஆடைகளை காலாகாலமாக அணிந்து வருகின்றார்கள்.

இதனை இப்போது அகற்ற சொல்லுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த உத்தரவு மீள பெறப்பட வேண்டும்.

இனவாதத்தை தற்போது கையில் எடுத்துள்ள அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தை கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறேன்  என இம்ரான் எம்.பி மேலும், தெரிவித்துள்ளார்