பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் கொள்கை இன்னும் நிலைத்திருக்கிறதா! முஜிபுர் எம்.பி கேள்வி

SL Protest Mujibur Rahman
By Dharu Mar 30, 2025 12:11 AM GMT
Dharu

Dharu

காசாவில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளைக் கண்டித்து ஸ்டிக்கர் ஒட்டியதற்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்ட இருபது வயது முஸ்லிம் இளைஞரை விடுவிக்கக் கோரி நேற்று மாலை கொம்பெனி தெரு பொலிஸ் தலைமையகம் அருகே போராட்டம் நடைபெற்றது.

போராட்டக்காரர்களின் கூற்றுப்படி, கொம்பெனி தெரு பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடையில் விற்பனையாளராக பணிபுரியும் அந்த இளைஞர், மார்ச் 22 அன்று சிசிடிவி காட்சிகளில் ஸ்டிக்கர் ஒட்டியதை அடையாளம் கண்ட பின்னர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் தற்போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவால் (TID) பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கைது குறித்து போராட்டக்காரர்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதோடு பாலஸ்தீனத்துடன் அமைதியான ஒற்றுமையை வெளிப்படுத்துவது பயங்கரவாதச் செயலாகக் கருதப்படுமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கிடையில், இன்றைய போராட்டத்தை ஏற்பாடு செய்த மிஃப்லால் மௌலவி, கொழும்பு குற்றப்பிரிவுக்கு (CCD) அழைக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் கலந்துக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

இது குறித்து போராட்டத்தில் கலந்துக்கொண் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கருத்து தெரிக்கையில், கைது மற்றும் போராட்டத்திற்கு அளித்த பதிலைக் கருத்தில் கொண்டு, பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் இலங்கை அரசின் நீண்டகால கொள்கை இன்னும் நிலைத்திருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.

போராட்டத்தின் போது, ​​பாலஸ்தீனத்துடன் ஒற்றுமையைக் காட்டுவது, இஸ்ரேலிய தாக்குதல்களைக் கண்டிப்பது போன்ற அமைதியான கருத்துக்களை வெளிப்படுத்தும் இளைஞர்களைக் கைது செய்வது ஒரு சுதந்திர நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பல பங்கேற்பாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இலங்கை பாரம்பரியமாக பாலஸ்தீனத்துடன் வலுவான நட்பைப் பேணி வருகிறது என்றும் மேலும் பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் சுதந்திர அரசுக்கான அவர்களின் போராட்டத்தை நீண்ட காலமாக ஆதரித்து வருகிறது என்றும் அவர் கூறியிருந்தார்.