ஊழல் நிறைந்த நிலக்கரி ஒப்பந்தம்! எரிசக்தி அமைச்சருக்கு மொட்டுக்கட்சி சவால்
நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக, எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியுடன் எந்த தொலைக்காட்சியிலும் பொது விவாதத்தில் தோன்றுவதற்கு தயாராக இருப்பதாக சவால் விடுத்துள்ளார்.
ஊழல் நிறைந்த விலைமனு கோரல் மூலம் தரமற்ற நிலக்கரி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு நட்டத்தை ஏற்படுத்தியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த சவாலை விடுப்பதன் மூலம், கேள்விக்குரிய பரிவர்த்தனை முற்றிலும் ஊழல் நிறைந்தது என்பதை நிரூபிக்க தயாராக இருப்பதாக சானக தெரிவித்துள்ளார்.
ஊழல் மற்றும் மோசடி
தற்போதைய அரசாங்கம் தனது ஆட்சியின் முதல் வாரத்திலிருந்தே ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக, நாடாளுமன்றத்தில் ஒரு பெரிய அளவிலான நிலக்கரி ஊழல் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.

வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருந்த நிலக்கரி விலைமனு கோரலை செப்டம்பர் வரை ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சானக குற்றம் சாட்டியுள்ளார்.
லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில், நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட முதல் இரண்டு நிலக்கரி கப்பல்களின் கலோரிஃபிக் மதிப்பு 5600-5800 க்கு இடையில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், நிலக்கரி டெண்டர் வழிகாட்டுதல்களின்படி, இது குறைந்தது 5900 ஆக இருக்க வேண்டும் என்றும் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.