ஈரானில் 250க்கும் மேற்பட்ட மசூதிகள் அழிப்பு! கடும் கோபத்தில் அயதுல்லா அலி கமேனி
ஈரானில் கடந்த சில வாரங்களாக நடைபெற்ற அரசு எதிர்ப்புப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய நபர்களே காரணம் என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டங்கள் வெளிநாட்டு சக்திகளால் திட்டமிடப்பட்டு ஈரானுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
பெரும் சேதம்
ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்த போராட்டங்களில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் தலையிட்டதாக கமேனி குற்றம் சாட்டினார்.

ட்ரம்ப்பை ஒரு "குற்றவாளி" என்று வர்ணித்த அவர், கடந்த கால போராட்டங்களை விட இந்த முறை அமெரிக்க ஜனாதிபதியே நேரடியாக ஒரு மையப்புள்ளியாக இருந்து சதி செய்ததாகக் கூறினார்.
இந்த வன்முறைச் சம்பவங்களில் சுமார் 5,000 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதில் 500 பாதுகாப்புப் படை வீரர்களும் அடங்குவர்.
பயங்கரவாதிகள் மற்றும் வெளிநாட்டு ஏஜெண்டுகளே அப்பாவி ஈரானியர்களைக் கொன்றதாக ஈரான் தரப்பு வாதிடுகிறது.
மசூதிகள் மற்றும் மருத்துவமனை
மேலும், போராட்டக்காரர்கள் 250-க்கும் மேற்பட்ட மசூதிகள் மற்றும் பல மருத்துவமனைகளைத் தீயிட்டு அழித்ததாகக் கூறப்படுகிறது.
[
ஆரம்பத்தில் விலைவாசி உயர்வு போன்ற பொருளாதாரக் காரணங்களுக்காகத் தொடங்கிய போராட்டங்கள், பின்னர் வெளிநாட்டுச் சக்திகளால் திசைதிருப்பப்பட்டு வன்முறையாக மாற்றப்பட்டதாக ஈரான் அரசு கருதுகிறது.
நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படிப்படியாக எஸ்எம்எஸ் (SMS) போன்ற சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சதிக்குப் பின்னால் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பிக்க முடியாது என்று எச்சரித்துள்ள கமேனி, "நாங்கள் நாட்டைப் போருக்கு இழுக்க மாட்டோம், ஆனால் உள்நாட்டு மற்றும் சர்வதேச குற்றவாளிகளைத் தண்டிக்காமல் விடமாட்டோம்" என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.