புலம்பெயர் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் பல சிறப்பு திட்டங்கள் முன்னெடுப்பு

Manusha Nanayakkara
By Mayuri Jul 21, 2024 10:45 AM GMT
Mayuri

Mayuri

புலம்பெயர் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

குருணாகலில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தொிவிக்கையில், வெளிநாட்டு ஊழியர்கள் 2019ஆம் ஆண்டில் இலங்கைக்கு 6.1 பில்லியன் டொலர்களை அனுப்பியதாலேயே ஒரு நாடாக காலூன்றி நிற்க முடிந்தது.

2022ஆம் ஆண்டில் இது 3 பில்லியன் டொலர்களாக குறைந்து போனது. எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 12 பில்லியன் டொலர்களை வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பியுள்ளனர்.

டொலர்களை அனுப்ப வேண்டாமென அறிவுறுத்தல்

சில அரசியல் தலைவர்கள் டொலர்களை அனுப்ப வேண்டாம் என்று கூறி நாட்டின் அரசியல் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்த முயன்றனர். ஆனால் வெளிநாட்டு தொழிலாளர்கள் அவ்வகையான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை.

புலம்பெயர் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் பல சிறப்பு திட்டங்கள் முன்னெடுப்பு | More Schemes To Encourage Migrant Workers

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துள்ள பொருளாதார வேலைத்திட்டத்தினால் வெளிநாட்டு ஊழியர்கள் இந்த நாட்டுக்கு பணம் அனுப்ப ஆரம்பித்துள்ளனர். அதன்படி, நாட்டின் அடிப்படைத் தேவைகளுக்குத் தேவையான அந்நியச் செலாவணியை அரசாங்கம் ஈட்டிக்கொண்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வாகன அனுமதிப் பத்திரத்தை விரைந்து வழங்குதல், ஆறு முறைக்கு மேலாக வெளிநாடு சென்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களும் செயற்படுத்தப்படுகின்றன.

இன்றும் புலம்பெயர் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வேலைத் திட்டமே முன்னெடுக்கப்படுகிறது. அதன்படி புலம்பெயர் தொழிலாளர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது என கூறியுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW