13 தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைபை சந்தித்த அமைச்சர் திரான்
அரசமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு நேற்றைய தினம் (10.08.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்படி, அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் முன்மொழியப்பட்டுள்ள பொலிஸார் அதிகாரங்கள் மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயங்கள்
அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயங்கள் தொடர்பில் பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்தியாவிலும் பிரித்தானியாவிலும் அதிகாரப் பகிர்வு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இலங்கையிலும் அவ்வாறான நடைமுறைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
எனினும் அவர்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்த அமைச்சர் அலஸ், பிரித்தானியாவில் அதிகாரப் பகிர்வு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டாலும், பிரித்தானியாவின் சமூக மற்றும் அரசியல் கலாசாரங்கள், இலங்கையுடன் ஒப்பிடும்போது பெருமளவில் வேறுபடுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, வடமாகாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் குற்றச் செயல்கள் தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் எடுத்துரைத்துள்ளனர்.