நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேசங்களுக்கு விஜயம்
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அப்பகுதியில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
பல வருடங்களாக மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேசங்களில் எதிர்நோக்கி வருகின்ற குடிநீர் பிரச்சினையின் உண்மைத் தன்மையை அடையாளம் கண்டு அதற்குறிய நிரந்தரத் தீர்வைப்பெற்றுக்கொள்வதற்காக இன்று (3) நீலாப்பொல நீரேற்றும் நிலையத்திற்கு (Intake Pumping Station) நாடாளுமன்ற உறுப்பினர் வருகை தந்துள்ளார்.
நீரேற்றும் இடத்திற்கு மகாவெளி நீர் வருவதில்லை. தற்பொழுது நீர் இறைக்கும் இயந்திரத்தின் மூலம் நீரேற்றும் இடத்திற்கு நீரைக் கொண்டுவருகிறார்கள். நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு ஏதாவது கோளாறு ஏற்படுமாக இருந்தால் நீர்விநியோகம் தடைப்படும் என கூறப்படுகின்றது.
எனவே இந்த பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு எதிர்வரும் வாரங்களில் அதற்கான திட்டவரைவொன்றினை கிழக்கு மாகாண பிரதிப் பொதுமுகாமையாளரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கோரியுள்ளார்.
உரிய அமைச்சு மற்றும் திணைக்களங்களில் அனுமதியைப்பெற்று நிரந்தரத்தீர்வைப் பெற்றுக்கொள்ளவிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.




