தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் எளிமையான முறையில் பூர்த்தி
2024ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாதுன் நபி தின விழா நிகழ்வுகள் அண்மையில் மிகவும் எளிமையான முறையில் இரத்தினபுரியில் நடைபெற்றதாக முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தை மையமாகக் கொண்டு கடந்த செப்டம்பரில் நடைபெற ஏற்பாடாகி இருந்த தேசிய மீலாத் விழா நிகழ்வானது, ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் காரணமாக பிற்போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இரத்தினபுரி மாவட்ட செயலகம் மற்றும் சப்ரகமுவ மாகாண கல்வி திணைக்களம் என்பவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற தேசிய மீலாத் விழா நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் டி.சுனில் ராஜபக்ஷ(Sunil Rajapakse) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
தேசிய மீலாத் விழா
அத்துடன் பாரம்பரிய இஸ்லாமிய கலை, கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு இரத்தினபுரி மாவட்டத்தில் இருபது முஸ்லிம் பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்காக 100 இலட்சம் ரூபா நிதியினை மத மற்றும் கலாசார விவகாரங்கள் திணைக்களத்தால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இரத்தினபுரி பள்ளிவாசல், இரத்தினபுரி ஜன்னத் பள்ளிவாசல், பலாங்கொடை பள்ளிவாசல் ஆகிய பள்ளிவாசல்களை நினைவுபடுத்தி இதன்போது தபால் தலை முத்திரை வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிரலயில், இம்முறை தேசிய மீலாத் விழாவில் அரசியல் பிரமுகர்கள் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என இரத்தினபுரி மாவட்ட மேலதிக செயலாளர் கயனி கருணாரத்ன முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |