டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை! வெளியான புதிய வர்த்தமானி
டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை திருத்தி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (15) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 27 அன்று வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பை திருத்தி, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் இந்த புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதிகபட்ச சில்லறை விலை
இந்த அதிகபட்ச சில்லறை விலைகளை விட அதிக விலைக்கு டின் மீன்களை விற்கவோ, வழங்கவோ, விற்பனைக்காக காட்சிப்படுத்தவோ கூடாது என்றும் வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 155 கிராம் நிகர எடை கொண்ட டுனா மற்றும் தகரத்தில் அடைக்கப்பட்ட மீனின் அதிகபட்ச சில்லறை விலை 165 ரூபாவாகவும், 425 கிராம் நிகர எடை கொண்ட தகரத்தில் அடைக்கப்பட்ட மீனின் அதிகபட்ச சில்லறை விலை 380 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 155 கிராம் நிகர எடை கொண்ட தகரத்தில் அடைக்கப்பட்ட மெக்கரல் மீனின் அதிகபட்ச விலை 210 ரூபாவாகவும் 425 கிராம் நிகர எடை கொண்ட தகரத்தில் அடைக்கப்பட்ட மெக்கரல் மீனின் அதிகபட்ச விலை 480 ரூபாவாகவும் உள்ளது.
மேலும், 155 கிராம் நிகர எடை கொண்ட தகரத்தில் அடைக்கப்பட்ட ஜெக் மெக்கரல் மீனின் அதிகபட்ச விலை 240 ரூபாவாகவும் 425 கிராம் நிகர எடை கொண்ட தகரத்தில் அடைக்கப்பட்ட ஜெக் மெக்கரல் மீனின் அதிகபட்ச விலை 560 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.