மத்தள விமான நிலையத்தால் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு: வெளியான அறிவிப்பு
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கையின்படி, 2017 - 2022 க்கு இடையில் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தால் ஏற்பட்ட மொத்த இழப்புகளின் பெறுமதி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 42.81 பில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அதில், 2022ஆம் ஆண்டுக்கான விமான நிலையத்தின் இயக்கச் செலவு சுமார் 2.03 பில்லியன் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது உண்மையில் அதன் வருமானத்தை விட 26 மடங்கு அதிகமானதாகும்.
கடந்த வருடம் ஏற்பட்ட நட்டம்
இதற்கிடையில் விமான நிலையத்தால் கடந்த வருடம் மாத்திரம் ஏற்பட்ட நட்டம் 22.21 பில்லியன் ரூபாய்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மத்தள விமான நிலையத்தின் ஊடாக மொத்தம் 11,577 பயணிகளே பயணித்துள்ளனர்.
அத்துடன் 2017 மற்றும் 2022 க்கு இடையில் அந்த விமான நிலையத்தின் ஊடாக 103,324 பயணிகள் மாத்திரமே பயணித்துள்ளனர்.
மொத்த இயக்கச் செலவு
மத்தளை விமான நிலையத்தை முதன் முதலில் மேம்படுத்தும் திட்டத்திற்கு 36.56 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இதில் 19 பில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடனாகப் பெறப்பட்டிருந்தது.
இதற்கிடையில், 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்பட்ட மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையத்தின் மொத்த இயக்கச் செலவு 86 மில்லியன் ரூபாய்களாகும் எனினும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்த விமான நிலையத்தினால் வருமானம் ஈட்ட முடியவில்லை என்று கணக்காய்வாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.