பொதுஜன பெரமுனவின் தலைமை தொடர்பில் மகிந்த வெளியிட்டுள்ள தகவல்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வகையில் சட்டமியற்றுவது பிரச்சினைக்குரியது, பேச்சுரிமை அனைவருக்கும் உண்டு என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும்
மகிந்த தெரிவித்துள்ளார்.
மீரிகம பகுதியில் வியாழக்கிழமை (28.09.2023) மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை
இங்கு ஊடகவியலாளர் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.
கேள்வி - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படவுள்ளதாக குறிப்பிடப்படுவது உண்மையா ?
பதில் - அவ்வாறு ஒன்றும் நான் அறியவில்லை. தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
கேள்வி – சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை கடன் ஒத்துழைப்பு தாமதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார பாதிப்பு தீவிரமடையுமா ?
பதில் - நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டிருக்க வேணடும். முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள், ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் தொடர்பில் பிரச்சினை காணப்படுகிறது.
சமூக வலைத்தள சட்ட மூலம்
கேள்வி – சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வகையில் புதிய சட்டமூலத்துக்கான வர்த்தமானி தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில் - சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வகையில் சட்டமியற்றுவது பிரச்சினைக்குரியது. அரசாங்கத்தின் சகல செயற்பாடுகளையும் விமர்சிக்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு.
பேச்சுரிமை அனைவருக்கும் உண்டு. அரசாங்கம் சிறந்த முறையில் செயற்பட்டால் விமர்சனங்கள் தோற்றம் பெறாது.
கேள்வி – தேர்தலுக்கு நீங்கள் தயாரா ?
பதில் - எந்த தேர்தலுக்கு தற்போது உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெற்றியோ,தோல்வியோ தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். தேர்தலுக்கு நாங்கள் தயாராகவே உள்ளோம் எனவும் மகிந்த தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |